இணையதள புகார்களுக்கு தனி காவல் பிரிவு உருவாக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் மேடைப் பேச்சாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையை தமிழிசை சவுந்திரராஜன் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. இதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்படி காவல்துறை செயல்பட வேண்டும்.
இணையதள பரிகாசங்களில் இருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக, இணையதள புகார்களுக்கு என்றே தனி காவல் பிரிவு உருவாக்க வேண்டும். இணையதளங்களைக் கட்டுப்படுத்த காவல்துறை சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்'' என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.