ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்வது என்ற முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் முடிவு, போட்டி அரசியலின் விளைவு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று சென்னை சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறியது:
"தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாகவும், மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கு என்பதால் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை என்பது தேசத்தின் மிகப் பெரிய தலைவரை இலங்கை மண்ணில் சதி செய்து, இந்தியக் குடிமக்கள் அல்லாத விடுதலைப் புலி உறுப்பினங்கள் இங்குள்ள சில பேரின் துணையோடு ஸ்ரீபெரும்புதூரில் நிறைவேற்றப்பட்ட நிகழ்வாகும்.
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 150 பேருக்கு மேல் சுட்டுக் கொன்றுவிட்டு, அதில் கசாப் மட்டும் பிடிபட்டு, அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி பேருந்தில் ஒரு பெண் கொடூமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. கோவையில் பள்ளிச் செல்கிற சிறுமி மற்றும் அவருடைய தம்பியைக் கடத்திச் சென்று, அந்தச் சிறுமியை சீரழித்து அவரது தம்பியைக் கொன்று ஆற்றில் தூக்கிப் போட்டதும் ஒரு தமிழன் தான்.
ஒரு கொலை என்பது கொடூரமானது. ஆனால் தமிழகத்தில் ராஜீவ் கொலையை அரசியலாக்கி, அதன் மூலம் ஒரு தமிழ் இன உணர்வை பயன்படுத்த சில பேர் முயல்கிறார்கள். மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பது மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே உள்ள பிரச்சினை.
ஆனால், 3 பேர் விடுதலை செய்யப்பட்டால் மகிழ்ச்சி என்று சொன்னால், அந்த 3 பேர் என்ன, 7 பேரையும் விடுதலை செய்கிறேன் என்று தமிழக அரசு எடுத்த முடிவு தமிழகத்தில் நடக்கின்ற போட்டி அரசியலின் விளைவே" என்றார் ஞானதேசிகன்.