தி.மு.க ஆட்சியில் எந்த அளவுக்குப் போனஸ் வழங்கப்பட்டதோ, அதே தொகையில் ஒரு ரூபாய்கூட உயர்த்தாமல், இந்த ஆண்டு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருப்பதாக தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் திமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டு பொங்கல் வரை போனஸ் வழங்கப்பட்டு வந்தது.
நான் ஆட்சியிலே இருந்தபோது அரசு அலுவலர்களுக்கு எந்த அளவுக்கு போனஸ் வழங்கப்பட்டதோ, அதே தொகையில் ஒரு ரூபாய்கூட உயர்த்தாத நிலையில் தற்போது இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஆணை பிறப்பித்திருக்கிறாரே தவிர வேறல்ல!
திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த பொங்கல் போனஸை 2001-ம் ஆண்டு முதல் ஜெயலலிதா பதவியிலே இருந்தபோது, நிறுத்தி வைத்தாரே, இந்த முறை அந்தப் பொங்கல் போனசைத்தான் வழங்க முன்வந்திருக்கிறார் என்று வேண்டுமென்றால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இதனை வேறு யாரும் புரிந்து கொள்ளாவிட்டாலும், அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் நன்றாகவே புரிந்து வைத்திருப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஜி.எஸ்.எல்.வி.-டி5 ராக்கெட்டை இந்தியா வெற்றிகரமாக
விண்ணில் செலுத்தியிருப்பது, இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை. நாம் அனைவரும் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய சாதனைகளில் இதுவும் ஒன்றாகும். இதற்காக விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழை எளிய நடுத்தரக் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் பெரிதும் பாதிக்கக்கூடிய விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி மாற்றுவழி காண வேண்டிய அ.தி.மு.க அரசு, யார்மீது பழி சுமத்தலாம் என்பதிலேயே காலத்தைக் கழித்து வருகிறது. அ.தி.மு.க ஆட்சியின்
மிகப்பெரிய சாதனை என்ற விருதினைப் பெற "மின்வெட்டு" பிரச்சினையும், "மணல்விலை" பிரச்சினையும்தான் போட்டி போடுகின்றனவாம்!
"கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 3,231 கொலைகள் நடந்துள்ளன என்று குவியும் புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சி" என்று எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தெரிவித் திருக்கிறார். இதெல்லாம் அதிமுக அரசுக்கு கிடைத்த பாராட்டா?
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.