சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால் தமிழகம் முழுவதும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் போராட்டம் தொடர்கிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 4 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் 23 அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன. சுமார் 7 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர்.
அரசு பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணி வழங்க வேண்டும். இதற்கான தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும், தனியார் செவிலியர் கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணி வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 28-ம் தேதி முதல் அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதனால், கடந்த 5 நாட்களாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஊசி போடுவது, மருந்து-மாத்திரைகள் கொடுப்பது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு நர்ஸ்கள் சங்கத்தின் மாநில தலைவர் அறிவுக்கண், பொதுச்செயலாளர் லீலாவதி, பொருளாளர் கனகலதா, அரசு செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர்கள் மற்றும் மாணவிகள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை தொடர்பாக சங்கத்தின் தலைவர் அறிவுக்கண், பொதுச்செயலாளர் லீலாவதி ஆகியோர் கூறியதாவது:
எம்ஆர்பி தேர்வு எழுதித்தான் அரசு மருத்துவமனைகளுக்கு பணியில் சேரவேண்டும். இதனை மாற்ற முடியாது என்று அமைச்சர், செயலாளர் தெரிவித்துவிட்டனர். அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு வகுப்புகள் குறைவு. ஆனால், மருத்துவமனையில் பணி அனுபவம் அதிகம். அதே போல தனியார் கல்லூரி மாணவிகளுக்கு வகுப்புகள் அதிகம். மருத்துவமனை பணி அனுபவம் குறைவு. அதனால், அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தேர்வில் கூடுதலாக 25 மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும் பள்ளிகளில் அடிப்படைத் தேவாகள், உதவித்தொகை போன்றவை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளிடம் தெரிவித்தோம். இதற்கு மாணவிகள் தேர்வு எழுதி அரசுப் பணிக்கு செல்லும் முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து மீண்டும் போராட்டத்தை தொடங்கிவிட்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகள் கூறியதாவது:
நாங்கள் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து, அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்துள்ளோம். தனியார் கல்லூரிகளில் படிப்பவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள். அவர்களுக்கு மருத்துவமனையில் பணி அனுபவம் இல்லை. வகுப்புகள் அதிகமாக நடக்கின்றன. ஆனால், எங்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வகுப்புகள் எடுக்கப்படுகிறது. தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவமனையில் பணியாற்றுகிறோம்.
தேர்வு எழுதித்தான் அரசு பணியில் சேர வேண்டும் என்றால், தனியார் கல்லூரிகளில் படிப்பவர்கள் எளிதாக தேர்வில் வெற்றிப்பெற்று விடுவார்கள். இது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.