சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த 2 பேர் மற்றும் ஏஜென்ட் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் இருந்து நேற்று காலை சென்னை விமான நிலையத்துக்கு விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த முகமது ரபீக் (34) என்பவரின் உடமைகளை சோதனை செய்த போது, தலா 100 கிராம் எடை கொண்ட 11 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. மொத்தம் 1 கிலோ 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரையும் கைது செய்தனர்.
அதேபோல் நேற்று காலை சவூதி அரேபியாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த ஆந்திர மாநில கடப்பாவைச் சேர்ந்த மெகபூப் பாஷா (33) என்பவர் தலா 100 கிராம் எடையுள்ள 9 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 900 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரையும் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி விமான நிலைய வளாகத்தில் இருந்த ஏஜென்ட் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.