தமிழகம்

இந்து எதிர்ப்பு இயக்கம் அல்ல திமுக: ஸ்டாலின் பேட்டி

ப.கோலப்பன்

"என் மனைவி தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு கோயில்களுக்கும் சென்று வருகிறார். அவரிடம் ஒருமுறைகூட இதுதொடர்பாக நான் கேள்வி எழுப்பியதில்லை. ஏனெனில் மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் யாருடைய பாதையிலும் நாங்கள் குறுக்கிடுவதில்லை" எனக் கூறியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் என்று எழுந்துவரும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், "திமுக-வின் 90% தொண்டர்கள் இந்துக்களே. அவர்களது குடும்பத்தினர் கடவுள் மீதும் மதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டே இருக்கிறார்கள்.

திமுக இந்து எதிர்ப்புக் கட்சி என்ற தொணியில் திட்டமிட்ட பிரச்சாரம் சமீப காலமாக பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், எனது குடும்பத்தினரும் சரி கட்சித் தொண்டர்களின் குடும்பத்தினரும் சரி இறை நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

என் மனைவி தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு கோயில்களுக்கும் சென்று வருகிறார். அவரிடம் ஒருமுறைகூட இதுதொடர்பாக நான் கேள்வி எழுப்பியதில்லை. ஏனெனில் மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் யாருடைய பாதையிலும் நாங்கள் குறுக்கிடுவதில்லை.

'நமக்கு நாமே' முதற்கட்ட பயணத்தின்போது நான் திருக்கோஷ்டியூர் கோவிலுக்குச் சென்று வந்தேன். ஏனெனில் அங்குதான் புனிதர் ராமானுஜர் அவரது ஆசிரியரின் அறிவுரையை புறக்கணித்து கோயில் உச்சியில் ஏறி அவருக்கு அளிக்கப்பட்ட உபதேசத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். அத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்தைப் பார்க்கவே அங்கு சென்றேன்.

அண்ணாவின் வழிவந்த நாங்கள் திருமூலரின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற போதனையைப் பின்பற்றுகிறோம். எங்கள் தலைவர் கருணாநிதி ராமானுஜம் தொலைக்காட்சித் தொடருக்கு வசனம் இயற்றியுள்ளார். ஏனெனில் அவரே கோவில்களுக்குள் தலித் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் பிரவேசம் செய்ய வழிவகுத்தார்.

வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டே நான் கோயில்களுக்குச் சென்று பூசாரிகளை சந்திக்கிறேன் என்பது தேவையற்ற குற்றச்சாட்டு. சமூகத்தின் அனைத்து தரப்பினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பவன் நான். இதற்கு முந்தைய காலக்கட்டங்களில்கூட நான் கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன், பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நமக்கு நாமே பயணத்தை துவக்கும்முன் சர்வ சமய தலைவர்களையும் நான் சந்தித்தேன். மசூதிகளுக்கும் சென்றிருக்கிறேன். வேளாங்கண்ணி ஆலயத்துக்கும் சென்றிருக்கிறேன். ஏன், திமுக தலைவர் கருணாநிதி எப்போதெல்லாம் சென்னை சைதாப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு அப்பகுதி கோயில்கள் சார்பில் சிறந்த முறையில் வரவேற்பு அளிப்பது வழக்கம்" என்றார்.

'நமக்கு நாமே' பயணம் குறித்து கூறும்போது, "தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை அளிக்கக்கூடிய ஒரே மாற்றுக் கட்சி திமுக" என்றார்.

SCROLL FOR NEXT