தமிழகம்

காவிரி பிரச்சினை மோசமாகி இருப்பதற்கு மத்திய பாஜக அரசே காரணம்: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

காவிரி பிரச்சினை இந்த அளவுக்கு மோசமாகி இருப்பதற்கு மத்திய அரசே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய இணை அமைச்சர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஜூன் 15-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து 3 மாத இழுபறிக்குப் பிறகு தலைவராக திருநாவுக்கரசர் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார்.

அவருக்கு காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக நேற்று காலை அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இன்று பொறுப்பேற்பு

தமிழக காங்கிரஸ் தலைவராக என்னை நியமனம் செய்த சோனியா, ராகுல் ஆகியோரிடம் வாழ்த்து பெறுவதற்காகவும், கட்சி யின் வளர்ச்சிக்கு ஆலோசனை பெறுவதற்காகவும் டெல்லி செல்கி றேன். உடனடியாக சென்னை திரும்பி 16-ம் தேதி (இன்று) மாலையில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்று பணிகளை தொடங்க இருக்கிறேன்.

காவிரி பிரச்சினை இந்த அளவுக்கு மோசமாகி இருப்பதற்கு மத்திய அரசே காரணம். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டுக் குழு ஆகியவற்றை அமைத்திருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகி இருக்காது.

காவிரி பிரச்சினை என்பது தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச் சினை. எனவே, உச்ச நீதிமன்ற உத் தரவுப்படி தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும். கர்நாடகாவில் நடக்கும் வன் முறைச் சம்பவங்களை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி பிரச்சினைக்காக தமிழகத்தில் நடக்கும் முழு அடைப்புப் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்குமாறு மேலிடத் தலைவர்களிடம் முறை யிடுவேன். கர்நாடகாவில் நடை பெற்ற வன்முறையில் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதில் மத்திய அரசு தலையிட வேண்டும்.

தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் பாஜக ஆட்சியின்போதும் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்தது. இதனை மறைத்துவிட்டு காங்கிரஸ் மீது பழி சுமத்துவது கண்டிக்கத்தக்கது. தமிழக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கண்டிப்பாக போட்டியிடும். மேலிடத் தலைவர்களுடன் ஆலோசித்து இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

திருநாவுக்கரசர் தலைவராக பொறுப்பேற்பதற்கான ஏற்பாடு களை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT