மழை வெள்ளத்தால் சேதமடைந்த எம்ஜிஆரின் வீட்டை சீரமைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா நினைக்கவில்லை என திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுக்குழுவுக்காக போயஸ் தோட்டத்தில் இருந்து திருவான்மியூர் வரை சுமார் 12 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இரு பக்கமும், நடுவிலும் மூன்று வரிசைகளில் வரவேற்பு வளைவுகள், பதாகைகள், பிளக்ஸ் போர்டுகள் அமைத்துள்ளனர். இதனால், போக்குவரத்து நெரி சல் அதிகரித்தது. பேனர் களை அகற்றக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போக்குவரத்துக்கு தடையாக இருந்த பேனர்களை அகற்ற முயன்ற இளைஞர்கள் தாக்கப் பட்டுள்ளனர். 2016 சட்டப்பேரவை தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்குழு 2 மணி நேரத்தில் நடந்து முடிந்துள்ளது. இதற்குதான் இவ்வளவு விளம் பரம், எதிர்பார்ப்பு, ஆடம்பரம், ஆர்ப்பரிப்பு.
நீதி விசாரணை
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீட்டுக்கு வழிவகுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், அதில் எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை.
மறுப்பது ஏன்?
செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்வதாக பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியிருக்கிறார். ஆனால், இதற்காக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சி களின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறார்.
ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்கு காரணமான எம்ஜிஆரின் ராமாவரம் வீடு, வெள்ளத்தால் சேதம் அடைந் துள்ளது. ஆனால், அதை சீரமைக்க வேண்டும் என ஜெயலலிதா நினைக்கவில்லை. ஆனால், எம்ஜிஆருடன் நடித்த சரோஜாதேவி, எம்ஜிஆரின் வீட்டை சீரமைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். வெள்ள நிவாரணப் பணிகளில் முதல்வர் எந்த அளவுக்கு ஈடுபட்டுள்ளார் என்பதற்கு இதுவே உதாரணம்.
மாபாதகம் அல்ல
‘நமக்கு நாமே’ பயணத்தின்போது கடந்தகால திமுக ஆட்சியில் நடந்த தவறுகளுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக ஸ்டாலின் தெரிவித்தார். இதை பொதுக்குழுவில் ஜெயலலிதா விமர்சித்துள்ளார். மன்னிப்பு கேட்பது மனித பக்குவம். அதுவும் மகேசனுக்கு இணையான மக்களிடம் மன்னிப்பு கோருவது ஒன்றும் மாபாதகம் அல்ல. அதனால் தவறுகள் நடந்ததாகப் பொருளும் அல்ல.
இவ்வாறு அறிக்கையில் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.