பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும் முன்பு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தமாகா தொண்டர் அணியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மாநில தொண்டர் அணித் தலைவர் எம்.அயோத்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத் தலைவர் கோவை தங்கம், பொதுச் செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
தமிழகத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட நிரந்தர ஆளுநரை உடனே நியமிக்க வேண்டும். வறட்சி, குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி, ஹைட்ரோகார்பன் விவகாரங்களில் தீர்வு காண பிரதமரிடம் முதல்வர் பேச வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து உரிய விளக்கம் பெற வேண்டும்.
விவசாயத்துக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் தரவேண்டும். காவிரியில் தண்ணீர் வராமல் இருக்க மத்திய பாஜக அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசுமே காரணம். கர்நாடக அரசு மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும். மத்திய அரசு நடு நிலையோடு செயல்பட வேண்டும். தற்போது பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக அறி விப்பு வந்துள்ளது. இதுசம்பந் தமாக ஆசிரியர்கள், மாண வர்கள், பெற்றோர், கல்வி யாளர்கள் அடங்கிய குழு அமைத்து, அந்தக் குழுவின் ஆலோசனைக்குப் பிறகே இதில் முடிவு எடுக்க வேண்டும்.
அதிமுக ஆட்சி அமைந்து ஓராண்டு முடிந்த நிலையில், அந்தக் கட்சி பிளவுபட்டுள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப ஆட்சி உள்ளதா என்பது கேள்விக்குறி. அரசியலுக்கு வருவது ரஜினிகாந்தின் தனிப்பட்ட முடிவு. இறுதியாக மக்கள்தான் முடிவு செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.