விவசாயக் கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதை தவிர்க்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள். இதனை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். நாடு முழுவதும் விவசாயத் தொழில் தான் பிரதான தொழிலாக உள்ளது. நாட்டில் விவசாயத் தொழிலுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும்.
குறிப்பாக வறட்சி, உரிய காலத்தில் போதிய மழையின்மை, சில நேரங்களில் மட்டும் கனமழை, இயற்கைச்சீற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயத் தொழில் பாதிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவதால் அவர்களது விவசாயக் கடனை ஆட்சியாளர்கள் தள்ளுபடி செய்ய வேண்டும். இது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் கடமை.
தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விவசாயத் தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகி விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கவலையாலும் மனம் உடைந்தும் தற்கொலை செய்துகொள்வதோடு, அதிர்ச்சியடைந்தும் உயிர் இழந்திருக்கிறார்கள்.
மேலும் விவசாயத்தை நம்பியிருக்கின்ற கூலித்தொழிலாளிகளும் அன்றாட வாழ்க்கைக்கு பொருளாதாரமின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்நிலையில் நாடு முழுவதும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் தொடர்ந்து பலவிதங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயத் தொழில் பாதிப்படையும் போது விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
தற்போது உத்தரப் பிரதேச மாநில அரசு அம்மாநில விவசாயிகளின் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இச்சூழலில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதை தவிர்க்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள். இதனை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.
மேலும் வங்கிகளில் கடன் வாங்கிய முதலாளிகளிடமிருந்து வாராக்கடனை வசூல் செய்யவும், வங்கிகளை லாப நோக்கத்தில் இயக்கவும் மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
குறிப்பாக முதலாளிகளுக்கு கடனில் சலுகை, தள்ளுபடி செய்வதை தவிர்த்து வசூல் செய்ய வேண்டும். இதனை விட்டுவிட்டு விவசாயக் கடனை வசூல் செய்வதில் முனைப்போடு செயல்படக் கூடாது.
எனவே மத்திய அரசு விவசாயத் தொழிலைக் காப்பாற்றவும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவும், விவசாயத்தை நம்பியிருக்கின்ற தொழிலாளர்கள் நலன் காக்கவும் முன்வர வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.