தமிழகம்

மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் குளச்சல் துறைமுக திட்டத்தை செயல்படுத்த கருணாநிதி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குளச்சல் துறைமுக திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கேள்வி - பதில் வடிவில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

ரூ.25 ஆயிரம் கோடியில் குளச்சல் துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றாகும். சர்வதேச கப்பல்களும் வந்து செல்லும் வகையில் குளச்சலில் துறைமுகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி இந்தத் திட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

25 கி.மீ. தொலைவில் கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகம் இருப்பதால் குளச்சலில் துறைமுகம் தேவையில்லை என மீனவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து குளச்சலில் துறைமுகம் அமைக்கக் கூடாது என மனு அளித்துள்ளனர். அந்த மாவட்டத்தில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அனைவரும் ஒருங்கிணைந்து வரவேற்கும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மீனவர் பிர்ச்சினை

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவலுக்கு தடை விதிக்க முடியாது என்ற சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இலங்கை கடல் பகுதிகளில் மீன் பிடிக்க இந்தியப் படகுகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன. இதனை மீனவர்களும் வரவேற்றுள்ளனர். எனவே, மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

பால் உற்பத்தியாளர்கள் வரும் 13-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். உற்பத்தி செய்யும் பால் முழுவதையும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT