சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் நடத்தும் உரிமை யாருக்கு என்பதில் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது.
சென்னையில் பந்தர் தெரு, பத்ரியன் தெரு, ஆண்டர்சன் தெரு, மலயம்பெருமாள் தெரு மற்றும் அம்பர்சன் தெரு ஆகியவை அடங்கியுள்ள பிராட்வே பகுதி, மக்கள் நெரிசல் மிகுந்ததாக உள்ளது.
இங்குள்ள குறுகலான தெருக்களில் தீபாவளி நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டால் பெருமளவு உயிரிழப்பு ஏற்படலாம். மக்களின் பாதுகாப்பு கருதி பிராட்வே பகுதி பட்டாசு கடைகளை தீவுத் திடலுக்கு இடமாற்றம் செய்ய கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு முதல் தீவுத் திடலில் பிராட்வே பகுதி வியாபாரிகள் பட்டாசு கடைகளை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளியின்போது பட்டாசு கடைகள் தவிர துணிக் கடைகள், சிறிய உணவகங்கள் போன்றவற்றை அமைக்க தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் டெண்டர் விளம்பரம் வெளியிட்டது. இதனை எதிர்த்து டிராஃபிக் ராமசாமி மற்றும் பிராட்வே பகுதி பட்டாசு வியாபாரிகள் வழக்குத் தொடர்ந்தனர்.
பட்டாசு கடைகள் உள்ள இடம் அருகே துணிக் கடைகள், பொழுதுபோக்குப் பூங்கா போன்றவற்றை அமைத்தால் மக்கள் நெரிசல் அதிகமாகி, மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஆகவே, தீவுத் திடலில் பட்டாசு கடைகளைத் தவிர வேறு எந்தக் கடையையும் அனுமதிக்கக் கூடாது என்பது அவர்கள் தரப்பு வாதமாக இருந்தது. மேலும், கடைகளுக்கான வாடகைத் தொகையைக் குறைக்க வேண்டும் என்றும் பிராட்வே வியாபாரிகள் வாதம் செய்தனர்.
எனினும், தீவுத் திடலில் தீ விபத்து எதுவும் நடைபெறாத வகையில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறியதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இந்த மனுக்களை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து தீவுத் திடலில் தீபாவளி நேர கடைகள் நடத்துவதற்கான டெண்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 120 பட்டாசு கடைகள் நடத்துவதற்கான ஏலத்தை பிராட்வேயில் பட்டாசு கடை நடத்திய வியாபாரியாக இல்லாத வேறொருவர் எடுத்துள்ளார். ஏலம் எடுத்தவர் தனது விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் பட்டாசு கடைகளை ஒதுக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தீவுத் திடலில் கடை அமைக்கும் உரிமை கோரி பிராட்வே பகுதி வியாபாரிகள் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.