திருப்பூரில் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கும், மாநகர் காவல்துறை ஆணையர் செந்தா மரைக் கண்ணனுக்குமான பனிப் போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் வரை விஷயம் சென்றுவிட்டதால் இரு தரப்பிலும் இப்பிரச்சினை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் சாலையின் மையத்தடுப்பில் கட்சிக்கொடி கட்டியது தொடர்பாக அதிமுகவினர் 6 பேர் மீது புகார் அளித்த கிராமநிர்வாக அலுவலர் செல்வராணி திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டது வருவாய்த்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, ஆளுங்கட்சியின் பின்னணி தான் காரணம் என பலராலும் பலமாக பேசப்படும் அளவிற்கு அதிமுகவிற்கும் காவல் துறைக்குமான பிரச்சினை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தமிழக முதல்வருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சரின் உறவினர்தான், இடமாற்றம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் என்பதால் அடுத்த சர்ச்சைக்கு அச்சாரமிட்டுள்ளது. மிகுந்த மன உளைச்சலில் இருந்த கிராமநிர்வாக அலுவ லர் செல்வராணியிடம்(52) நடந்தவற்றை கேட்டறிந்தோம்.
திருப்பூர் வடக்கு வருவாய் ஆய்வாளர் சமரசம் சொன்னதின் பேரில்தான் அதிமுகவினர் கொடி கட்டிய பகுதிக்கு சென்றேன். அங்கிருந்த கட்சிக்காரர்கள் இங்க உனக்கென்னம்மா வேலை? என தகாத வார்த்தைகளில் பேசினர். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்பி விட்டேன். அன்றையதினமே அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்திருந் தார்கள். அதன்பேரில் அங்கு சென்றேன். கொடி கட்டிய பிரச்சினை தொடர்பாக புகார் மனு எழுதிக் கொடுக்க சொன்னாங்க. வருவாய் ஆய்வாளர் சமரசம் சொன்னதின் பேரில் புகார் கொடுத்தேன்.
இந்நிலையில் என்னை தற்போது இடமாற்றம் செய்துள்ள னர். ஜன.20 ஆம்தேதி பிரச்சினை யானது. 27ஆம் தேதி நிர்வாக நலன் கருதின்னு சொல்லி இடமாற்றம் செய்துருக்காங்க. பொதுக்கலந்தாய்வு மூலம்
15 - வேலம்பாளையத்திற்கு கிராம நிர்வாக அலுவலராக ஆகஸ்ட் மாதம் பணிக்கு வந்தேன்.
எந்தக் காரணங்களும் சொல்லா மல் கோட்டாட்சியர் பழனிக்குமார் கையெழுத்து போட்டு இடமாற் றம்னு அனுப்பியிருக்கார். நான் ஓ.பன்னீர்செல்வம் உறவினர்தான். எனக்கு அவர் மாமா முறைதான் வேணும். அவரிடம் இந்த பிரச்சினையை நான் கொண்டு செல்லவில்லை என்றார்.
இதற்கிடையே வருவாய்த் துறை தரப்பில் சிலரிடம் பேசினோம். செல்வராணியின் இடம் மாறுதல் உத்தரவை திரும்ப பெறக்கோரி உடுமலைப்பேட்டை யில் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு வெள்ளிக்கிழமை மாலை அவசரமாக கூடியுள்ளது.
செல்வராணியின் பணிமாறுதல் உத்தரவை திரும்ப பெறும் வரை, மண்டலப் போராட்டமாகவும், மாநிலப் போராட்டமாகவும் மாறும் என உறுதிபட தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய திருப்பூர் வடக்கு கோட்டாட்சியர் பழனிக் குமார், இதில் அரசியல் காரணங்கள் ஏதுமில்லை. அவங்களுக்கு உடம்பு வேற சரியில்லை. நிர்வாக நலன்கருதி தான் பண்ணியிருக்கோம். பொதுக் கலந்தாய்வில் கலந்து கொண்ட பலரை இடமாற்றியுள்ளோம்.
15-வேலம்பாளையம் டவுன் ஏரியா. தேர்தல் வேற வருது. ரூரல் பகுதி என்றால் அவங்களால் எளிமையாக நிர்வகிக்க முடியும் என்றார்.
இதற்கிடையே, திருப்பூர் மாநகர் காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் 2நாட்கள் சென்னையில் தங்கி திருப்பூரில் நடந்தவற்றை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தகவல்.
செல்வராணிக்கு நிகழ்ந்தவை யும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாம். திருப்பூர் காவல் ஆணையருக்கு அதிமுக விரித்த வலையில் அமைச்சர் ஓ.பியின் உறவினரான வருவாய் அலுவலர் அகப்பட்டுக் கொண்டது அடுத்தகட்ட சர்ச்சையை விதைத்துள்ளது.