தமிழகம்

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே...!- மு.க.அழகிரியிடம் வைகோ உருக்கம்

செய்திப்பிரிவு

மு.க.அழகிரியின் வீடு தேடிச் சென்று, தேர்தலில் தனக்கும், மதிமுக வேட்பாளர்களுக்கும் ஆதரவு தரும்படி கேட்ட வைகோ, தங்கள் பழைய நினைவுகளை செய்தியாளர்களிடம் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதி யில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக களமிறங்கியுள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தத் தொகுதிக்கு உள்பட்ட மதுரை சிலைமானில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்கினார். முன்னதாக காலை 9.15 மணியளவில் அழகிரியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கே வந்தார் வைகோ. வீட்டுக்குள் சென்ற வைகோவுக்கு பொன்னாடை போர்த்தினார் மு.க.அழகிரி. இதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்களை வெளியே அனுப்பிவிட்டு, இருவரும் 9.20 மணி முதல் 9.50 வரை சுமார் 30 நிமிடங்கள் தனிமையில் பேசினர்.

சந்திப்பு முடிந்ததும் வீட்டில் இருந்து வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:

ஒரே விமானத்தில் நாங்கள் இருவரும் மதுரையில் இருந்து சென்னைக்குப் பயணித்தபோது, பரஸ்பரம் அன்பைப் பகிர்ந்து கொண்டோம். வீட்டுக்கு வாருங்கள் என்று அருமைச் சகோதரர் மு.க.அழகிரி அழைத்தார். நான் வருகிறேன் என்றேன். நான் விரும்பிக் கேட்கிற பழைய திரைப்பட பாடல்கள் அவருக்கும் பிடிக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சந்திப்பின்போது, நாங்கள் பழைய பாடல் கேசட்களைப் பகிர்ந்து கொண்டோம். அமெரிக்காவுக்குப் போய் வரும்போது செங்கிஸ்கான் பட வீடியோவை வாங்கிக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தேன். அந்தச் சம்பவங்களை எல்லாம் நினைவு கூர்ந்தோம்.

நல்லபடியாக நடக்கும்

கடைசியாக 1993-ல் நான் வீட்டுக்கு வந்தபோது நடந்த சம்பவங்களை நினைவுபடுத்திச் சொன்னேன். அவங்களும் (அழகிரி) அதைச் சொன்னாங்க. இப்போது நடைபெறுகிற தேர்தலில் மதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு குறிப்பாக விருதுநகரில் போட்டியிடுகிற எனக்கு ஆதரவு தருமாறு கேட்டேன். அதேபோல எங்கள் வேட்பாளர்கள் க.அழகுசுந்தரம், சதன் திருமலைக்குமார், ஜோயல், டாக்டர் மாசிலாமணி, மல்லை சத்யா, கணேசமூர்த்தி அனைவருக்கும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. உங்கள் நல்லாதரவை நான் நாடுகிறேன் என்றேன். நான் சந்தித்ததற்கு மிகுந்த அன்பைத் தெரிவித்துக் கொண்டார். மனம்விட்டுப் பேசிக் கொண்டோம். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். வெற்றி பெறுவீர்கள் என அழகிரி வாழ்த்தினார். இவ்வாறு வைகோ கூறினார்.

உங்களுக்கு ஆதரவு தருவதாக அழகிரி வாக்குறுதி தந்தாரா? என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, நல்லபடியாக நடக்கும் என்றால், அதுதானே அர்த்தம் என்று கூறிவிட்டு விருட்டெனக் கிளம்பினார் வைகோ.

வழக்கமாக பத்திரிகையாளர்கள் போதும் போதும் என்று சொல்லுமளவுக்குப் பேசும் வைகோ, இந்த முறை கேள்விகள் எதையும் எதிர்கொள்ளாமல் சுருக்கமாகப் பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முடிவு செய்யவில்லை: மு.க.அழகிரி

வைகோ கிளம்பிச் சென்ற ஐந்தாவது நிமிடத்தில் மு.க.அழகிரி ராஜபாளையம் புறப்பட்டார். அப்போது வைகோவின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு ஆதரவு அளிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். இன்னும் முடிவு செய்யவில்லை. என் ஆதரவாளர்களின் கருத்தைக் கேட்டுத்தான் எந்த முடிவையும் எடுக்க முடியும் என்றார் அழகிரி.

SCROLL FOR NEXT