வேலூர் அண்ணா சாலையில் கடந்த 1972-ம் ஆண்டு முதல் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி இயங்கி வந்தது. இங்கு, எல்கேஜி முதல் 10-ஆம் வகுப்பு வரை 362 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். வேலூர் மாவட்டத்தில் செயல்படும் மெட்ரிக் பள்ளிகளில் மிகவும் பழமையானது செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியாகும்.
இந்த பள்ளியில் படித்த பரத் என்பவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக உள்ளார். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், நுண்ணுயிரியல் பிரிவில் வல்லுநர்கள் என பலர் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
இந்த பள்ளி கடந்த 2014-ம் ஆண்டு முதல் அரசின் அங்கீகாரம் பெறவில்லை. மேலும், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளியின் அங்கீகாரத்தை நிரந்தரமாக ரத்து செய்வதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் முருகன் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்தத் தகவலை பள்ளி வளாகத்தில் டிஜிட்டல் பேனராக வைத்ததுடன் வகுப்பறையில் இருந்து மாணவர்களையும் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
திடீரென அங்கீகாரத்தை ரத்து செய்ததால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகக் கூறி வேலூர் அண்ணா சாலையில் பெற்றோர்கள் 2 முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கீகாரம் ரத்து செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளதாக பள்ளி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான நகல் திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படும் என்றனர். இதை ஏற்று பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக, பள்ளியின் தாளாளர் சார்லஸ் கூறும்போது, ‘‘பள்ளியின் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால், ‘டி’ படிவ விண்ணப்பம் அளிக்க வட்டாட்சியர் மறுத்துவிட்டார். பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று பெற்றோர் யாரும் புகார் கூறவில்லை. இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளோம்’’ என்றார்.
இதுகுறித்து, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் முருகன் கூறும்போது, ‘‘உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை கேட்டு பள்ளி நிர்வாகத்தினர் மனுத் தாக்கல் செய்தனர். இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை. தடை ஆணை எதையும் பிறப்பிக்கவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கியதால் பள்ளியின் அங்கீகாரம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. அந்தப் பள்ளி மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் மற்றும் சேர்க்கைக்கான படிவங்கள் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.
திங்கட்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் மாணவர்கள் அனைவருக்கும் வேறு பள்ளியில் சேருவதற்காக மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் பள்ளியில் படித்த மாணவர்களை அருகில் உள்ள 3 தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்’’ என்றார்.