முதல்வர் ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரையை விளம்பரம் செய்ய மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல் வாட்ஸ்-அப் மூலம் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார். இந்த உரை செல்பேசிகள் மூலம் வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது.
இப்போது தரைவழி தொலைபேசிகள் மூலமாகவும் ஜெயலலிதாவின் உரை பிரச்சாரம் செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களாக திடீரென தொலைபேசி அழைப்பு மணி ஒலிக்கிறது. எடுத்தால், ‘‘வணக்கம்… உங்கள் அன்பு சகோதரி பேசுகிறேன்…’’ எனத் தொடங்கி ஜெயலலிதாவின் முழு உரையும் ஒலிக்கிறது.
தமிழகத்தில் சுமார் 10 கோடி செல்பேசி இணைப்புகளும், 2 கோடி தரைவழி தொலைபேசி இணைப்புகளும் உள்ளன. இந்த அனைத்து தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கும் குறைந்தது 5 முறையாவது ஜெயலலிதாவின் உரை அனுப்பப்படுகிறது. இதற்காக பெருமளவில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது கடும் கண்டனத்துக்குரியது.
இன்றைய சூழலில் முதல்வர் ஜெயலலிதாவின் வாட்ஸ் – அப் உரை முன்கூட்டியே தொடங்கப்பட்ட தேர்தல் பிரச்சாரமாகும். அதிமுகவின் இந்த அரசியலை தமிழக மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இதற்கெல்லாம் வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.