ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டதில் இளைஞர் சையது முகம்மது இறந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விரைவில் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அவரது குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சையது முகம்மது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி, அவரது உறவினர் எஸ்.சகுபர் அலி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், காவல் நிலையத்துக்குள் சையது முகம்மது எஸ்.ஐ.யால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தற்போது தடயத்தை அழிப்பதற்கான முயற்சி யில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்தது தொடர்பாக ஆய்வு செய்யும் நிபுணர் (பாலிஸ்டிக் எக்ஸ்பெர்ட்) முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெறவில்லை. கொலை தொடர்பாக எஸ்.ஐ. காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே, பாலிஸ்டிக் நிபுணர் முன்னிலையில் சையது முகம்மது உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறி ஞர் ஜின்னா வாதிடுகையில், ‘சையது முகம்மது மீது எந்த வழக்கும் இல்லை. அவரது உடலில் 4 இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அவை உடலில் இருந்து வெளி யேறவில்லை. ரத்தமும் வெளியேற வில்லை. எனவே, அவரை அடித்துக் கொன்றுவிட்டு, துப்பாக்கி யால் சுட்டிருக்கலாம் என்றார்.
அரசு வழக்கறிஞர் ஏ.பி.பால சுப்பிரமணியன் வாதிடுகையில், சையது முகம்மது இறப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அவரது குடும்பத்துக்கு அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது.மேலும் ராமநாதபுரம் நீதித் துறை நடுவர் விசாரித்து வருகிறார். எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் சம்பவம் நடைபெற்ற இடம் சீல் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதி, ‘சையது முகம்மது உடலை உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைக்க வேண்டும். இறுதிச் சடங்கின்போது பாதுகாப்பு வழங்க வேண்டும்.
போலீஸாருக்கு சையது முகம்மது உறவினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிபிசிஐடி போலீஸார் விரைவில் விசாரணையை முடிக்க வேண் டும். அவரது குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்குவது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.