தருமபுரி மாவட்டம் நத்தம் காலனி அருகே உள்ளது கொடகாரியம்மன் கோயில். இக்கோயிலில் நாயக்கன்கொட்டாய் கிராமப் பகுதியில் உள்ள இருவேறு சமூக மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் தீபாவளிக்கு மறுநாள் அப்பகுதி கிராம மக்கள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் நத்தம் காலனியில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையால் கோயில் வழிபாட்டிலும் மோதல் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று கொடகாரியம்மன் கோயிலில் நத்தம் காலனி, ஆண்டிஅள்ளி, வெள்ளாளப்பட்டி, நாயக்கன்கொட்டாய் உள்ளிட்ட கிராம மக்கள் பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.
இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணாபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட 14 கிராமங்களுக்கு 144 தடையுத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. அதில் 22-ம் தேதி நள்ளிரவு முதல் வருகிற 10-ம் தேதி நள்ளிரவு வரை 20 நாட்களுக்கு 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு காரணமாக கோயிலுக்கு கூட்டமாக செல்லக் கூடாது என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனித் தனியாக கோயிலுக்குச் சென்று அமைதியான முறையில் வழிபட தடை எதுவும் இல்லை என போலீஸார் தெரிவித்தனர்.