தென்னிந்தியாவில் 117 திட்டங்களுக்கு ஜப்பான் மக்கள் மற்றும் ஜப்பான் அரசு சார்பில் 80 லட்சம் டாலர் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்று சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு தூதரக துணைத் தூதர் கோஜி சுகியாம தெரிவித்தார்
திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடி கிராமத்தில் சுவாமி தாயனந்த சரஸ்வதி கல்விக் குழு சார்பில் செயல்படும், படிப்பை தொடர முடியாத இளைஞர்களுக்கான பத்மா நரசிம்மன் தொழிற்பயிற்சி நிலை யத்துக்கு (ஐடிஐ) ஜப்பான் மக்கள் மற்றும் ஜப்பான் அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.65 லட்சம் நன்கொடையில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தை நேற்று திறந்து வைத்து கோஜி சுகியாம பேசியதாவது:
ஜப்பானிய துணைத் தூதரகம் மூலம் மனித பாதுகாப்புக்கான அடித்தள கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மூலம் தென்னிந்தியாவில் 117 நிறுவனங்களுக்கு ரூ.80 லட்சம் டாலர் நிதியுதவி வழங்கப் பட்டுள்ளது. இந்த ஐடிஐ புதிய கட்டிடத்தில் 100 ஏழை, எளிய மாணவர்களுக்கு ஏ.சி. மெக்கானிக், ஃபிட்டர், வீட்டு உபயோகப் பொருட்கள் சர்வீஸ், வீட்டு வயரிங் மற்றும் பிளம்பிங் போன்ற புதிய படிப்புகளை கற்றுத் தர முடியும்.
இதன்மூலம் இவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பும் சமூகப் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். கடந்த ஜனவரியில் ஜப்பான் பிரதமர் அபே, இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அதேபோல, இந்திய பிரதமர் மோடி, செப்டம்பரில் ஜப்பான் நாட்டை முதல் வெளியுறவு பயணத்துக்காகத் தேர்ந்தெடுத்தார். இதன்மூலம் இரு நாடுகளின் நட்புறவு வலுவாக உள்ளது.” என்றார்.