தமிழகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் 103 கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வறட்சியால் பாதிப்பு: விவசாயிகளுடன் ஆட்சியர், எம்.பி. சந்திப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் 15,108 ஏக்கர் பரப்பிலான நெற் பயிர்கள் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததாலும், வார்தா புயல் பாதிப்பாலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. இதில், வார்தா புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் பணியினை மாவட்ட நிர்வாகம் தற்போது தொடங்கியுள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பொன்னேரி, கும் மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பாண்டிய ராஜன், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கடந்த 6, 7 ஆகிய இரு நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுகளில், வறட்சி பாதிப்பு தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட கண் காணிப்பு அலுவலர் எஸ்.கே. பிரபாகர், மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உள்ளிட்டோரும் பங்கேற்று, களத்தில் உண்மை அறியும் நோக்கில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்றும் ஆய்வுகள் நடந்தன. அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மட்டும் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்ட மப்பேடு பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். திருவள் ளூர் கோட்டாட்சியர்ஜெயச்சந்திரன் மற்றும் வட்டாட்சியர் கார்க்குழலி உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சியால் 15,108 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பு 103 கிராமங்களில் ஏற்பட்டுள்ளன. மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு விவசாயிகளையும் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை அறிந்து வருகிறோம். மாவட்டத்தில் நடந்து வரும் களநிலை உண்மை அறியும் பணிகள் மிக விரைவில் முடிவுக்கு வரும். அதன்பிறகு, வறட்சி பாதிப்புகள் குறித்த அறிக்கை தமிழக அரசுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT