தமிழகம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 24-ம் தேதி தீர்மானம்: நாராயணசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் வரும் 24-ம் தேதி கூடும் சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்ற அமைச்சரவையில் முடிவு செய்துள்ளோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வரும் உச்ச கட்ட போராட்டத்தை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம், புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதற்கு அனைத்து கட்சியினரும், அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரமாகியுள்ளது.

எனவே ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். உச்ச நீதிமன்றத்தில் ஒரு விஷயம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கும்போதும், அது தொடர்பாக மத்திய அரசால் அவசரச் சட்டம் கொண்டுவர முடியும். உதாரணமாக கடந்த காலங்களில் ஆதிதிராவிடர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அவசர சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளோம்.

வரும் 24-ம் தேதி கூட்டப்பட உள்ள புதுச்சேரி சட்டசபையில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்ற அமைச்சரவையில் முடிவு செய்துள்ளோம். தமிழக அரசும் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு அவசர சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றினால் மத்திய அரசு அனுமதி தர முடியும்'' என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT