தமிழகம்

சரணடைய கால அவகாசம் கேட்டு சசிகலா விண்ணப்பித்த மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

செய்திப்பிரிவு

சரணடைய கால அவகாசம் கேட்டு வி.கே. சசிகலா விண்ணப்பித்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

சசிகலா, இளவரசி, சுதகாரன் ஆகியோர் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்பளித்தது.

இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பான மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. சசிகலாவின் தரப்பு வழக்கறிஞர் கேடிஏஸ் துளசி, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராக அவகாசம் அளிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.சி. கோஷ், "நாங்கள் உடனடியாக சரணடைய வேண்டும் என்று கூறியுள்ளோம்" என்று கூறி சசிகலாவின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT