இனி நீதிமன்றங்களை நாடத் தேவையில்லை
ஓராண்டுக்குப் பிறகு பிறப்பு, இறப்பு பதிவுகளைச் செய்வதற் கான ஆணையை வழங்கும் அதிகாரத்தை நீதிபதிகளுக்குப் பதிலாக வருவாய் கோட்டாட்சி யர்களுக்கு (ஆர்டிஓ) வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது. அது தொடர்பான பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஊராட்சிகளில் பிறப்போ, இறப்போ நிகழ்ந்தால் 21 நாட்களுக்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். பேரூராட்சிகளில் செயல் அலுவலரிடமும், நகராட்சியில் நகராட்சி ஆணையரிடமும், மாநகராட்சிகளில் மண்டல அலுவலகங்களில் உள்ள பிறப்பு, இறப்பு பதிவாளரிடமும் பதிவு செய்ய வேண்டும்.
பிறப்பு, இறப்பு பதிவு
21 நாட்களுக்குப் பிறகு, 30 நாட்களுக்குள் பதிவு செய்தால், காலதாமத கட்டணமாக ரூ.2 செலுத்தி மேற்கூறிய இடங்களில் பதிவு செய்யலாம். 31-வது நாள் முதல் ஓராண்டுக்குள் பதிவு செய்ய வேண்டுமென்றால் ஊராட்சித் தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்று, காலதாமத கட்டணமாக ரூ.5 செலுத்தி பிறப்பு, இறப்பை பதிவு செய்யலாம்.
ஓராண்டுக்குப் பிறகு பதிவு செய்ய வேண்டுமென்றால் குற்றவியல் நடுவர் நீதிமன்ற ஆணை பெற்ற பின்னரே பதிவு செய்ய முடியும். சென்னையை பொறுத்தவரை மாநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற ஆணை பெற வேண்டும்.
ஓராண்டுக்குப் பிறகு சிக்கல்
மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவமனையே பிறப்பு, இறப்பு பதிவு அலுவலருக்கு தெரிவித்துவிடும். ஆனால், வீட்டில் குழந்தை பிறந்து, அதன்பின்னர் மருத்துவமனையில் தாயும், சேயும் அனுமதிக்கப்பட்ட நிலையில், அம்மருத்துவமனை பதிவு அலுவலரிடம் தகவல் தெரிவிக்காது. சிலர் விவரம் தெரியாமல் பிறப்பை பதிவு செய்யாமல் இருந்துவிடுவர். இது போன்ற குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது, அவர்களுக்கு பிறப்பு சான்று தேவைப்படுகிறது. அப்போது நீதிமன்ற ஆணை பெற பொதுமக்களுக்கு தாமதம் ஏற்படுவதுடன் வழக்கறிஞர் செலவும் ஆகிறது.
நீதிமன்றம் கண்டுபிடிப்பு
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் 18 வயதைக் கடந்த நிலையில், தண்டனை குறைப்புக்காக தன்னை 18 வயதுக்கு உட்பட்டவர் என தெரிவித்து, அதற்கான சான்றும் கொடுத்துள்ளார். அதில் நீதிபதிக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்ற ஆணையின் பேரில், பிறப்பு சான்று பெற்றது தெரியவந்தது. பின்னர் குழு ஒன்றை அமைத்து, தோராயமாக ஒன்றரை ஆண்டுகளில், பிறப்பு சான்று கோரி எவ்வளவு வழக்குகள் வருகின்றன என ஆய்வு செய்தபோது, 4 லட்சம் வழக்குகள் விசாரணைக்கு வந்திருப்பது தெரியவந்தது.
புதுவையில் ஆர்டிஓ
பின்னர் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பிறப்பு இறப்பு சான்றுக்காக கடைபிடிக்கும் முறை குறித்து ஆய்வு செய்த நீதிமன்றம், அங்கு வருவாய் கோட்டாட்சியர் மூலமாக பிறப்பு, இறப்பு பதிவுக்கான ஆணை வழங் கப்பட்டு வருவது தெரியவந்தது. மேலும் மத்திய அரசின் பிறப்பு, இறப்பு பதிவு சட்டத்தில் முதல் வகுப்பு குற்றவியல் நீதிபதி அல்லது முதல் வகுப்பு நிர்வாக நீதிபதி (வருவாய் கோட்டாட்சியர்) ஆணை வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாணை வெளியீடு
ஆனால், தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு கொண்டு வந்த பிறப்பு, இறப்பு பதிவு விதிகளில் குற்றவியல் நடுவரிடம் ஆணை பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அறிந்த நீதிமன்றம், புதுச்சேரியை போன்று ஏன் தமிழகத்தில் பின்பற்றக் கூடாது என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு அண்மையில், பிறப்பு, இறப்பு பதிவு விதியில், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதற்கு மேல் உள்ள பதவி வகிக்கும் நிர்வாக நீதிபதி, பிறப்பு, இறப்பு ஏற்பட்டு ஓராண்டுக்குப் பிறகு பதிவு செய்வதற்கான ஆணையை வழங்கலாம் என திருத்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் (பிறப்பு, இறப்பு பதிவு) என்.ஈஸ்வரன் கூறியதாவது:
தற்போது இந்த விதிகள் திருத்தம் தொடர்பாக அனைத்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் களுக்கும் பயிற்சி அளித்து வருகிறோம். இவர்களே பிறப்பு, இறப்பு பதிவுக்கான ஆணை வழங்குவதற்கு வழிகாட்டு நெறி முறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அவை குறித்தும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு விளக்கி வருகிறோம். இவர்களிடம் ஆணையை பெற, அவரவர் பகுதிக்கு உட்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் மாநக ராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பதிவின்மை சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
மத்திய அரசின் பிறப்பு, இறப்பு பதிவு சட்டத்தில் முதல் வகுப்பு குற்றவியல் நீதிபதி அல்லது முதல் வகுப்பு நிர்வாக நீதிபதி (வருவாய் கோட்டாட்சியர்) ஆணை வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு அண்மையில், பிறப்பு, இறப்பு பதிவு விதியில், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதற்கு மேல் உள்ள பதவி வகிக்கும் நிர்வாக நீதிபதி, பிறப்பு, இறப்பு ஏற்பட்டு ஓராண்டுக்குப் பிறகு பதிவு செய்வதற்கான ஆணையை வழங்கலாம் என திருத்தி அரசாணை வெளியிட்டுள்ளது.