தருமபுரியில் மாங்காய் குடோனில் கார்பைடு வேதிப்பொருள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தருமபுரியில் மாங்காய் உள்ளிட்ட பழங்கள் கார்பைடு போன்ற வேதிப்பொருட்களின் உதவியுடன் பழுக்க வைக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பிருந்தாவுக்கு புகார் வந்தது. அதைத் தொடர்ந்து அவர் தலைமையில் தருமபுரி நகரில் டேகீஸ்பேட்டை பகுதியில் உள்ள மாங்காய் குடோன்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது பிஸ்மில்லா மாங்காய் மண்டியில் மாம்பழங்கள் கார்பைடு எனப்படும் வேதிப்பொருட்கள் உதவியுடன் பழுக்க வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. எனவே, அந்த மாங்காய்களையும், அரை கிலோ கார்பைடு வேதிப் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த மாங்காய்கள் மற்றும் வேதிப்பொருள் பொட்டலங்கள் அனைத்தும் தருமபுரி அடுத்த தடங்கம் ஊராட்சி பகுதியில் உள்ள நகராட்சி குப்பை வளாகத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அழிக்கப்பட்டது. பழ வகைகளை இதுபோன்று வேதிப்பொருட்களின் உதவியுடன் பழுக்க வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோபிநாத், நாகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.