கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தில் பலியான மற்றும் பாதிக் கப்பட்ட குழந்தைகளின் பெற்றோ ருக்கு இழப்பீட்டுத் தொகை முறை யாக வழங்கப்படவில்லை எனக்கூறி தமிழக அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 16 குழந்தைகள் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர்.
தீ விபத்தில் பலியான குழந்தை களின் பெற்றோருக்கு இழப்பீடு கோரி பெற்றோர்கள் தரப்பில் இன்பராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார்.
அவர் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.5 லட்சமும், கடுமையான தீக்காயம் அடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.6 லட்ச மும், சிறு காயமடைந்த குழந்தை களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம் இழப்பீட்டுக்கான வட்டியை 9 சதவீதமாக உயர்த்தி அந்த தொகையை சம்பவம் நடந்த தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்க உத்தரவிட்டிருந்தது.
அதன்படி கடந்த 2004 முதல் 2011 வரையிலான காலகட்டத்திற்கு 8 சதவீதமும், 2011 முதல் 2012 வரையிலான கால கட்டத்திற்கு 8.6 சதவீதமும், 2012 முதல் தற்போது வரை 8.7 சதவீதமும் வட்டித் தொகை கணக்கிட்டு வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையைக் கழித் துக்கொண்டு எஞ்சிய தொகை வழங்கப்படும் என்றும், இந்த தொகை 4 வாரங்களில் வழங்கப் படும் என்றும் கடந்த 2016 அக். 18-ம் தேதி தமிழக அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசு உறுதியளித்தபடி இந்த இழப்பீட்டுத் தொகை முறையாக வழங்கப்படவில்லை எனக்கூறி மனுதாரரான இன்பராஜ் தற்போது, தமிழக அரசு மீது உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு ) ஹுலுவாடி ஜி. ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.