உள்ளாட்சித் தேர்தலை வரும் ஜூலைக்குள் கண்டிப்பாக நடத்து வோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடக்கவிருந்த உள் ளாட்சித் தேர்தல், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ரத்து செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உள்ளாட்சி தேர் தலை மே 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிட்டது. இல்லை யெனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் மாநிலம் முழுவதும் ஆன்லைன் மூலமாக சரிபார்க்கப்பட்டு வருவதால் மே 14-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க சாத்தியமே இல்லை. ஜூலை இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க அவகாசம் வழங்க வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலு வாடி ஜி.ரமேஷ், என்.சதீஷ் குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையத்தின் வழக் கறிஞர் பி.குமார் ஆஜராகி, ‘‘இந்திய தேர்தல் ஆணையம் திருத்தி யமைக்கப்பட்ட வாக்காளர் பட்டி யலை கடந்த ஜனவரி மாதம்தான் வெளியிட்டது. அதை வைத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை ஆன்லைன் மூலமாக சரிபார்த்து வருகிறோம். எனவே, ஜூலைக்குள் நடத்தி முடிக்க அவகாசம் வழங்க வேண்டும்’’ என கோரினார்.
திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘உள் ளாட்சித் தேர்தலை எப்படியாவது தள்ளிக்கொண்டே போக வேண்டும் என்பதில்தான் மாநிலத் தேர்தல் ஆணையம் குறியாக உள்ளது. உடனடியாக நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வாக்காளர் பட்டியலை காரணம் கூறுகின்றனர். ஜூலை இறுதிக்குள் உள்ளாட்சித் தேர் தலை நடத்தினால் எங்களுக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால், கண்டிப்பாக ஜூலைக்குள் தேர் தலை நடத்துவோம், அதன்பிறகு எந்த அவகாசமும் கோர மாட்டோம் என மாநிலத் தேர்தல் ஆணையர் உத்தரவாதம் அளிக்க உத்தரவிட வேண்டும்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘உள்ளாட்சித் தேர்தலை குறித்த தேதிக்குள் நடத்துவதில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அப்படி என்னதான் சிரமம் என தெரியவில்லை.
எனவே இத்தேர்தலை சொன்னபடி வரும் ஜூலை இறுதிக்குள் கண்டிப்பாக நடத்தி முடிப்போம் என மாநில தேர்தல் ஆணையர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.