தமிழகம்

பறக்கும் ரயில் பணியில் மற்றொரு விபத்து: இரும்பு கம்பி விழுந்ததில் காரின் கண்ணாடி உடைந்தது

செய்திப்பிரிவு

சென்னை புழுதிவாக்கத்தில் பறக்கும் ரயில் பணியின் போது மேலிருந்து இரும்பு கம்பி விழுந்ததில் சாலையில் சென்ற காரின் கண்ணாடி உடைந்தது.

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவையை நீட்டிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

புழுதிவாக்கத்தில் பறக்கும் ரயிலுக்கான பணியில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டு இருந்தனர். நேற்று காலை 11 மணி அளவில் மேலிருந்து இரும்புக் கம்பி ஒன்று விழுந்ததில் கீழே சென்ற காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. காரை ஓட்டி வந்த வேதன் என்பவர் வாகனத்தை நிறுத்திவிட்டு, தொழிலாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீஸார் வேதனை சமாதானம் செய்தனர். பின்னர் வேதன் அளித்த புகாரின்படி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடிக்கடி மேலிருந்து இரும்புக் கம்பிகள் சாலையில் விழுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

SCROLL FOR NEXT