சென்னை மாநகராட்சி பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால், பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு பள்ளி நிர்வாகங்கள் சார்பில் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், தொடக்க நிலை, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அரசு அறிவித்தபடி, மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன. பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் நுழைவு வாயில்களில், மாணவ, மாணவியரை வரவேற்கும் விதமாக அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் சார்பில் வாழை மரங்களை நட்டும், மாவிலை தோரணங்களைக் கட்டியும் அலங்கரித்து இருந்தனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் பள்ளி நுழைவு வாயில்களில் வாழை மரங்களை நட்டும், தோரணங்கள் மற்றும் வண்ண பலூன்களைக் கட்டியும் அலங்கரித்தோம். மேலும் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், பூங்கொத்து, ரப்பர், பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கி வரவேற்றோம்.
அதற்கு முன்னதாக, அனைத்து பள்ளிகளிலும், அனைத்து வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் தேக்க தொட்டிகள் அனைத்தும் தூய்மையாக்கும் பணிகளில் ஈடுபட்டோம். தூய்மையை உறுதிசெய்த பின்னரே, தற்போது மாணவர்களை பள்ளிகளில் அனுமதிக்கிறோம் என்றார்.