தமிழகம்

உமேஷ் சச்தேவுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்: ஸ்டாலின்

செய்திப்பிரிவு

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தொழில்நுட்ப வல்லுநர் உமேஷ் சச்தேவுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தனது முகநூல் பதிவில், ''டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள, ‘ஆயிரம் ஆண்டுகளில் உலகத்தில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய 10 இளைஞர்கள்’ என்ற பட்டியலில் சென்னையை சேர்ந்த உமேஷ் சச்தேவ் இடம்பெற்றுள்ளார். அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், ‘யூனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ்’ என்ற நிறுவனத்தின் இணை நிறுவனரான உமேஷ் சச்தேவ், தனது நண்பர் ரவி சாரோகியுடன் இணைந்து 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் செல்போன் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார்.

ஒரு மொழியில் பேசப்படும் தகவல், குறிப்பிட்ட 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, 150 பேச்சு வழக்குகளில் கேட்கும் வசதியுடன் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காகவே அவர், ஆயிரம் ஆண்டுகளில் உலகில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய 10 இளைஞர்கள் என்ற டைம்ஸ் நாளிதழின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

பல்வேறு மொழிகள் பேசும் இந்தியாவுக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு இணைப்புப் பாலமாக அமையும். தனது கண்டுபிடிப்பு மூலம் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள உமேஷ் சச்தேவுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT