கோவை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஏற்கெனவே சுமார் 20 லட்சம் வாகனங்கள் இயங்குகின்றன. மேலும், ஆண்டுதோறும் புதிதாக 1.5 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
சுமார் 50 சதுரகிலோமீட்டர் பரப்பில் கோவை நகரின் மையப் பகுதிகள் உள்ள நிலையில், வாகனங்களின் நெரிசல் கடுமையாக உள்ளது. மேலும், கல்வி, தொழில், வியாபாரம், மருத்துவம் உள்ளிட்டவற்றுக்காக ஏராளமான வாகனங்களில் தினமும் சுமார் 2 லட்சம் பேர் கோவைக்கு வருகின்றனர்.
நெரிசலால் தவிக்கும் வாகன ஓட்டிகள்
கோவை அவிநாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, நஞ்சப்பா சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளின் ஓரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து ஆலோசனைக் குழு உறுப்பினர் டி.நந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறியது: கோவை நகரைப் பொறுத்தவரை வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பொது பார்க்கிங் வசதி இல்லாத நிலை உள்ளது. பல இடங்களில் வாகனங்களை நிறுத்த குறிப்பிட்ட இடங்களை போலீஸார் ஒதுக்கியுள்ளனர். ஆனால், அவை போதுமானதாக இல்லை.
குறிப்பாக, கிராஸ் கட் சாலை, டவுன் ஹால், ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலை, காந்திபுரம் உள்ளிட்ட வர்த்தக மையங்கள் அதிகம் அமைந்துள்ள பகுதிகளில், பண்டிகை, திருவிழாக்களின்போதும், வார இறுதி நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை.
தனியார் நிறுவனங்கள் வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்தியிருந்தாலும், சில வர்த்தக நிறுவனங்கள் வாகன நிறுத்துமிடங்களை அமைக்காததால், சாலையோரங்களிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர்.
எனவே, கோவை மாநகராட்சியில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.
2014-ல் அறிவிக்கப்பட்ட திட்டம்
கோவை மாநகரின் வளர்ச்சிக்காக 2014-ம் ஆண்டில் சுமார் ரூ.2,378 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த திட்டத்தில், தனியார் பங்களிப்புடன் ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், டவுன்ஹால் பகுதிகளில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, விரிவான திட்ட அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆய்வுசெய்ய, புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமும் நியமிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தினர் மல்டிலெவல் பார்க்கிங் அமையவுள்ள இடங்களை ஆய்வு செய்துள்ளனர். எனினும், இதுவரை இந்த திட்டம் செயல்படுத்தவில்லை.
போக்குவரத்து நெரிசல் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். எனவே, இந்த திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றார்.
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு…
இதுகுறித்து மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும், சிஐடியு மாவட்டத் தலைவருமான சி.பத்மநாபன் கூறும்போது, “போக்குவரத்து நெரிசலால் மக்களின் நேரம், எரிபொருள் வீணாகிறது. தனியார் மால்கள் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களிலும், பாதுகாப்பு காரணங்களால் வாகனங்களை நிறுத்த அனுமதிப்பதில்லை. இதனால், வாகனங்களை நிறுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.
மாநகராட்சி, அரசுக்குச் சொந்தமான நிலங்களை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை மீட்டு, அங்கு மாநகராட்சி சார்பில் மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கலாம்” என்றார்.
விரைவில் டென்டர் விடப்படும்
இதுகுறித்து மாநகராட்சி தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கூறும்போது, “கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம், டவுன் ஹால், கிராஸ்கட் ரோடு பகுதிகளில் மல்டிலெவல் பார்க்கிங் அமைக்கும் திட்ட வரைவுக்கு அரசின் அனுமதி கிடைக்கும் தருவாயில் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன், உடனடியாக டென்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும். விரைவில் அப்பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். அதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும்” என்றார்.