நீ கிழக்கே இழுத்தால், நான் மேற்கே இழுப்பேன் என்று முறுக்கிக்கொண்டு நின்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியும் திங்களன்று ஒரே மேடையில் நின்று அன்பு பாராட்டி னார்கள். அதைவிட ஆச்சர்யம், புதுச்சேரி கவர்னரும் விழாவில் கலந்துகொண்டதுதான்!
மாநில அரசின் துணை இல்லாமல் ஓ.என்.ஜி.சி நிறுவன நிதி உதவியோடு, காரைக்கால் மாவட்டத்தில் நவீன மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டுவதற்கு, நாராயணசாமிக்கு புதுச்சேரி ஆளுநர் வீரேந்திர கட்டாரியா துணை நின்றார்.
ஆனால், இவர்களை ஓவர் டேக் செய்து மாநில அரசின் நிதி உதவியோடு மருத்துவமனையை கட்ட திட்டமிட்டார் ரங்கசாமி. இந்நிலையில் கடந்த மாதம், மருத்துவமனை கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார் ஆளுநர். இதன் பிறகு நாராயணசாமி, ரங்கசாமி இருவரும் மருத்துவமனை விவகாரத்தில் தீவிரம் காட்ட ஆரம்பித்தனர்.
இந்நிலையில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் மருத்துவமனைக்கான மொத்த மதிப்பீட்டில் 10 சதவீதத்தை தனது பங்களிப்பாக தர உத்தரவாதம் அளித்து, முதல் கட்டமாக ரூ.30 கோடி ஒதுக்கியது. இதையடுத்து, ரங்கசாமியும் நாராயணசாமியும் தங்களுக்குள்ளே இருந்த ஈகோ யுத்தத்தை ஒத்திவைத்துவிட்டு கூட்டாக மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தத் தீர்மானித்தார்கள் . காரணம், வந்து கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்.
இதையடுத்து, திங்கள்கிழமை ரங்கசாமி தலைமை ஏற்க நாராயணசாமி முன்னிலை வகிக்க ஆளுநர் வீரேந்திர கட்டாரியா மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த மூன்று துருவங்களையும் ஒரே மேடையில் பார்த்தது, புதுச்சேரி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.