தமிழகம்

ராமேசுவரம் அருகே இலங்கைக்கு கடத்த இருந்த ரூ. 2 கோடி மதிப்பு வலி நிவாரணி, போதை மாத்திரைகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

ராமேசுவரம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான போதை, வலி நிவாரணி மாத்திரைகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, பாம்பன் முந்தல் முனையில் வெள்ளிக்கிழமை சுங்கத்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையில் துணை ஆய்வாளர் ஹட்ஸ்குமார் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கடற்கரையில் ஒரு நாட்டுப் படகில் 6 பைகள் கேட்பாரற்று கிடந்தன. அந்த பைகளைச் சோதனையிட்டபோது, அவற்றில் 9 பெட்டிகளில் போதை மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. இதையடுத்து படகையும், மாத்திரைகளையும் பறிமுதல் செய்து ராமேசுவரம் சுங்கத்துறை அலுவலகத்துக்குக் கொண்டு வந்தனர். முதற்கட்ட ஆய்வில், 9 பெட்டிகளில் 4 வகையான போதை மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் 1.82 லட்சம் எண்ணிக்கையில் இருந்தது. இவற் றின் மதிப்பு சுமார் ரூ. 2 கோடி.

மேலும் இலங்கைக்கு போதை மாத்திரைகளை கடத்த முயன்ற நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT