கிரானைட் கற்களை அரசுடமை யாக்கக் கோரி மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
சென்னையைச் சேர்ந்த ஜெம் கிரானைட் நிறுவனப் பங்குதாரர் களான வீரமணி, ஆசைதம்பி, சேகர், குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
‘தமிழகத்தில் மேலூர் உட்பட பல்வேறு இடங்களில் கனிமத் தொழில் செய்து வருகிறோம். மத்திய, மாநில அரசுகளிடமிருந்து சிறந்த நிறுவனம் என்ற விருது களைப் பெற்றுள்ளோம். இந்த நிலை யில், எங்கள் நிறுவனம் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், எங்கள் மீது தனிநபர் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
எங்கள் குவாரிக்குச் சொந்தமான கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றதுடன், எங்களை நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி என். கிருபாகரன் விசாரித்தார். மேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுதாரர்களுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும், அந்த வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் நேரில் ஆஜராக விலக்கு வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.