தமிழகம்

பாய் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்- கோரை விலை உயர்வுக்கு கண்டனம்

இரா.தினேஷ்குமார்

பாய் உற்பத்திக்கு மூலப் பொருளான கோரை விலை, ஒரே ஆண்டில் 3 மடங்கு உயர்த்தப்பட்டதைக் கண்டித்து பாய் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆவூரி, ஆரணி அருகே உள்ள குன்னத்தூர், வந்தவாசி மற்றும் வாணியம்பாடி, பொன்னேரி, ஓமலூர், சிதம்பரம் அருகே உள்ள தைக்கால், கைத்தாறு உள்ளிட்ட பல ஊர்களில் குடிசைத் தொழிலாக ‘பாய்’ உற்பத்தி செய்யப்படுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை குடும்பத் தொழிலாக செய்து வருகின்றனர். சுமார் 2 ஆயிரம் இயந்திரங்கள்(விசைத்தறி) பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பாய் உற்பத்திக்கு மூலப் பொருளான ‘கோரை’யின் விலை, ஓரே ஆண்டில் 3 மடங்கு அதிகரித்ததால், அத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியானது. கோரை வியாபாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடந்தாண்டு இறுதியில் ஒரு கட்டு விலை ரூ.900-ஆக குறைந்தது. இதனால், விலை உயர்வு பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் ஜனவரி மாதம், ஒரு கட்டு கோரை விலை ரூ.1,200 எட்டியது. இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் பாய் உற்பத்தியாளர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பாய் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.

விலை உயர்வுக்கு பதுக்கல் காரணம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கச் செயலாளர் சனாவுல்லா கூறுகையில், “கரூர் மாவட்டத்தில்தான் அதிகளவில் கோரை உற்பத்தி செய்யப்படுகிறது. கோரை விலை உயர்வால் தொழில் நலிவடைந்து வருகிறது. அரிசி, சர்க்கரையைப் போன்று கோரையைப் பதுக்கி வைத்து தட்டுப்பாடு என்ற போலியான சூழலை உருவாக்கி விலையை வியாபாரிகள் உயர்த்தி வருகின்றனர். ஒரு கட்டு கோரையை ரூ.1,200 வாங்கி, அதனை பாய்களாக தயாரிக்கும்போது ரூ.2,200 வரை செலவாகிறது. அதன்மூலம் தயாரிக்கப்படும் பாய்களை, ரூ.2,000 வரைதான் விற்பனை செய்ய முடிகிறது. கோரை கட்டு முறையை மாற்றிவிட்டு எடைக் கணக்கில் கோரையை விற்பனை செய்ய வேண்டும். இதைக்கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். எங்கள் சங்க நிர்வாகிகளும், கோரை வியாபாரிகளும் சேலத்தில் வியாழக்கிழமை பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். அதில் சுமூக முடிவு எட்ட வேண்டும். நெசவாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று பாய் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இலவச மின்சாரத்தை தமிழக முதல்வர் வழங்க வேண்டும்’’ என்றார்.

சாப்பாட்டுக்கு கஷ்டம்

பாய் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கூறுகையில், “எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.150 வரை கூலி கிடைக்கும். அந்த தொகையை கொண்டுதான் குடும்பத்தை நடத்தி வருகின்றோம். இந்த நிலையில் கோரை விலை உயர்வு காரணமாக பாய் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 வேலை என்பதற்கு பதிலாக 2 வேலை சாப்பாட்டுக்குகூட கஷ்டமான நிலை உள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT