மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்துக்கு திடீரென சென்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். திருச்சியில் நடக்கவுள்ள திமுக மாநாட்டுக்கு வருமாறு மமக நிர்வாகிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட உள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. மாநிலங்களவைத் தேர்தலிலும் திமுக வேட்பாளர் திருச்சி சிவாவுக்கு மமக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மாலை, சென்னை மண்ணடியில் உள்ள மமக அலுவலகத்துக்கு திடீரென சென்றார். அவரை மமக நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.இந்தச் சந்திப்பில் மமக தலைவர் ஜே.எஸ்.ரிபாய், மூத்த தலைவர்கள் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., ஹைதர் அலி, பொருளாளர் ரஹ்மத்துல்லா, தமுமுக பொதுச் செயலாளர் அப்துல் சமது, துணைத் தலைவர் குணங்குடி ஹனிபா, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
பின்னர் வெளியே வந்த ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:
திருச்சியில் நடக்கவுள்ள திமுக மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, மமக நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்தேன். மாநிலங்களவைத் தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றிபெறும். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை கருணாநிதி முடிவு செய்வார். கூட்டணி குறித்து மமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் திமுக பேச்சு நடத்தி வருகிறது. வீரப்பன் கூட்டாளிகள் என குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
மமக மூத்த தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், ‘‘மலேசியாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, மமக நிர்வாகிகள் சந்தித்துப் பேசியது குறித்து ஸ்டாலினிடம் தெரிவித்தோம். திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’’ என்றார்.