தமிழகம்

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மீதான வழக்கு தள்ளுபடி

செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை பொதுநல வழக்குகள் மையத்தின் கன்வீனர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் பணிபுரிந்தபோது, திருப் பரங்குன்றம் நிலையூரில் வீடற்ற ஏழைகள் 17 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. வருவாய் அதிகாரிகள் நடத்திய விசாரணை யில், 2001-ல் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கிய பட்டாதான் செல்லுபடி யாகும். 2012-ல் வழங்கப்பட்ட பட்டா செல்லாது என்று தெரியவந்தது. இதனால் 17 பேருக்கும் வேறு இடத்தில் பட்டா வழங்க சகாயம் மற்றும் வருவாய் அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதுவரை பட்டா வழங்கவில்லை.

அந்த 17 பேரும் இழப்பீடு கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் மற்றும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் இந்த வழக்கில் உண்மைக்கு மாறாக பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் சகாயம் மற்றும் ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கே.ரவிச் சந்திரபாபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப் பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் டி.எஸ்.முகமது முகைதீன் பதில் மனு தாக்கல் செய்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பொதுநலன் வழக்கு மையம் என்ற பெயரில் வழக்கு தொடர் வதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி 20.1.2017-ல் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப் படையில், அந்த செய்தியின் உண் மைத் தன்மையை ஆராயாமல் முழு விவரங்கள் இல்லாமல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதை ஏற்க முடியாது என்றும், இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்வதால் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்வதில் இந்த அமைப்பு கைதேர்ந்த அமைப்பு போல் மக்கள் மத்தியில் தவறான எண்ணம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் மனுதாரரின் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

          
SCROLL FOR NEXT