கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட கால் டாக்ஸிகள், ஆட்டோக்களுக்கு போக்குவரத்து போலீஸார் நேற்று அபராதம் விதித்தனர். இதைக் கண்டித்து டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே ஜவஹர்லால் நேரு சாலையில் கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் தங்களது வாகனங்களை வரிசையாக நிறுத்திவைத்துக்கொண்டு சவாரி பிடிப்பது வழக்கம். இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் அடிக்கடி புகார் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் கால் டாக்ஸிகள், ஆட்டோக்களை நிறுத்தவிடாமல் போக்குவரத்து போலீஸார் நேற்று காலை தடுத்தனர். போலீஸ் உத்தரவை மீறி, சாலையில் நிறுத்தப்பட்ட கால் டாக்ஸிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் சென்றன. போக்குவரத்து போலீஸார் எடுத்த நடவடிக்கையை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வெகுவாகப் பாராட்டினர்.
போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கால் டாக்ஸி டிரைவர்கள் மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் எதிரே ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜவஹர்லால் நேரு சாலையில் திடீர் மறியலிலும் ஈடுபட்டனர். ‘போக்குவரத்து போலீஸின் கெடுபிடி நடவடிக்கையால் சவாரி கிடைக்கவில்லை. எங்கள் வருமானம் பாதிக்கப்படுகிறது. போலீஸார் மாமூல் கேட்கின்றனர்’ என்று அவர்கள் கூறினர்.
ஆயுதபூஜையை முன்னிட்டு நேற்று, சென்னை பல்லவன் சாலை பாடிகாட் முனீஸ்வரர் ஆலயத்தில் பூஜை செய்வதற்காக ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன.