தமிழக உள்ளாட்சி தேர்தலை மே 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் ஒத்துழைப்புடன், தேர்தலுக்கான இதர நடைமுறைகளை ஏப்ரல் 14-ம் தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபரில் 2 கட்டங்களாக நடக்க இருந்தது. இத்தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளைப் பின்பற்றி முறையாக வெளியிடப்படவில்லை என்று கூறி தேர்தலை ரத்து செய்தார். டிசம்பர் 30-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்குமாறும் அறிவுறுத்தினார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம், தமிழகஅரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தன. அப்போது, மே 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேர்தல் நடத்தப்படும் தேதியை 21-ம் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அதே அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், ‘‘தேர்வுக் காலமான மார்ச், ஏப்ரலில் தேர்தல் நடத்த முடியாது. எனவே, மே 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிப்பது சாத்தியம் அல்ல’’ என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கெடு விதித்தனர்.தேர்தலுக்கான நடைமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தொடங்கி, ஏப்ரல் 14-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தனி நீதிபதி ஏற்கெனவே விதித்த நிபந்தனைகள் குறித்து, இந்த வழக்கின் மேல் முறையீட்டு பிரதான வழக்கு மார்ச் 1-ம் தேதி விசாரணைக்கு வரும்போது விசாரிப்பதாகவும் அறிவித்தனர்.