தமிழகம்

விவசாயிகளுக்காக ஓரணியாக திரள்வோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

செய்திப்பிரிவு

விவசாயிகளின் உரிமைகளை மீட்க நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து, விவசாயிகளுக்காக ஓரணியாக திரளும் வகையில் தொண்டர்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும் என வலியுறுத்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "ஆட்சியிலிருந்தாலும் மக்களின் நலனைப் புறக்கணிக்கும் முதல்வரும் அமைச்சர்களும் உள்ள மாநிலத்தில், ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழகத்தின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் தொடர்ந்து பாடுபடும் இயக்கமாக தி.மு.கழகம் இருக்கிறது. வறட்சியாலும் கடன் தொல்லைகளாலும் வாழ்வுரிமை இழந்து, தற்கொலைக்கும் அதிர்ச்சி மரணங்களுக்கும் உள்ளாகி வரும் தமிழக விவசாயிகளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுமாறும் அ.தி.மு.க. அரசை பலமுறை வலியுறுத்தியும் கேளா காதினராக ஆட்சியாளர்கள் இருப்பதால், பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் தி.மு.கழகம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கான அழைப்பை விடுத்தது.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் 16-4-2017 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பை ஏற்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் திராவிடர் கழகம் உள்ளிட்ட சமூக நீதி இயக்கங்களும் பங்கேற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் முன்னின்று கூட்டியிருந்தாலும், இதில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்து அதனடிப்படையில் விவசாயிகளின் உரிமைகளை மீட்கவும், தமிழகத்தின் நலன் காக்கவும் தேவையான தீர்மானங்கள் வடிவமைக்கப்பட்டு, அனைத்துத் தலைவர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தமிழக விவசாயிகளின் நலனை மட்டுமே மனதில் கொண்டு, அனைத்து தலைவர்களும் தெரிவித்த கருத்துகளும், வழங்கிய ஒத்துழைப்பும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.

மத்தியில் ஆள்பவர்களும் மாநிலத்தை ஆட்சி செய்பவர்களும் ஆற்ற வேண்டிய பணிகளை மறந்து, தங்களுக்கு வாக்களித்த மக்களை வஞ்சித்து வரும் நிலையில், தி.மு.கழகமும் தமிழகத்தின் மற்ற எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து தமிழக மக்களின் நலன் காக்கும் ஜனநாயக வழியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் இந்த 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், இந்தத் தீர்மானங்களுக்கு அழுத்தமும் வலிமையும் சேர்க்கும் விதத்தில் 19வது தீர்மானமாக, விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழகம் தழுவிய அளவில் ஏப்ரல் 25ந் தேதியன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

எந்தவொரு தனி மனிதரையோ, அமைப்பினரையோ கட்டாயப்படுத்துவது கழகத்திற்கோ, நம்முடன் ஒருங்கிணைந்துள்ள கட்சிகளுக்கோ நோக்கமல்ல. நாம் உயிர் வாழ உணவளிக்கும் விவசாயிகள், தங்களின் உயிரைப் பாதுகாக்க முடியாமல் தற்கொலைக்கும் அதிர்ச்சி மரணங்களுக்கும் ஆளாகும் அவல நிலையை மத்திய-மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்

வகையில், ஒரே ஒரு நாள் நமக்கு ஏற்படும் இடர்பாடுகளைப் பொறுத்துக் கொண்டு, விவசாயிகளின் உரிமைகளை மீட்டுத் தர துணை நிற்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

பொதுமக்களிடம் இந்த நோக்கத்தை எடுத்துக் காட்டுவதற்காக 22-4-2017 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

துண்டறிக்கைகள் வாயிலாகவும், திண்ணைப் பிரச்சாரம் வாயிலாகவும், தேநீர்க்கடைகள்-பேருந்து-ரயில் பயணங்கள், தனிப்பட்ட சந்திப்புகள் வாயிலாகவும் விவசாயிகளின் உரிமைகளை மீட்க நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் குறித்து எடுத்துரைத்து, தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் முழு மனதுடன் இதில் ஈடுபாடு காட்டி, நமக்கு உணவளித்து உயிர் காக்கும் விவசாயிகளுக்கு துணை நிற்போம் என்கிற உணர்வினை மேம்படச் செய்யும் வகையில் கழக உடன்பிறப்புகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

நமக்காக அல்ல.. நமக்கு வாழ்வளிக்கும் விவசாயிகளுக்காக ஒரு நாளை அர்ப்பணிப்போம். விவசாயிகளின் வாழ்வுரிமையை மீட்போம்"

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

          
SCROLL FOR NEXT