தமிழகம்

இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

செய்திப்பிரிவு

இந்தித் திணிப்பு முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை வருமாறு:

மத்தியில் ஆளும் பாஜக, நாட்டின் ஒட்டுமொத்த நலனை புறக்கணித்து தனது சொந்த கொள்கைகளை மக்களின் மீது வலுக்கட்டாயமாக திணித்து நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைத்து வருகிறது.

முன்னர் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது இந்தியில் தான் பேச வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசு உத்திரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து தேசியநெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் இந்தி மொழியில் மட்டுமே ஊர்பெயர் எழுதப்பட்டது. தற்போது கடவுச்சீட்டில் (பாஸ்போர்ட்) உள்ள விபரங்கள் வருங்காலத்தில் இந்திமொழியில் இடம் பெறும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று (24.06.2017) மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு இந்தி இல்லையெனில் நாட்டின் வளர்ச்சியே இல்லை எனத் தெரிவித்து, பிறமொழி பேசும் மக்களை ஆத்திரமூட்டியுள்ளார்.

பல்வேறு மொழி பேசும் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும், மத்திய அரசு வலுக்கட்டாயமாக இந்தி மொழியை திணிப்பதற்கான பெரும் முயற்சி மேற்கொள்கிறது. நாடு முழுவதும் ஒரே மொழி என்கிற தனது மறைமுகத் திட்டத்தை செயல்படுத்திட முனைவது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய செயலாகும்.

மத்திய அரசின் இந்தித் திணிப்பு வெறிச்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கின்றது.

SCROLL FOR NEXT