2017-ம் ஆண்டுக்கான எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தமிழ்ப்பேராய விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி அதன் மூலம் ஆண்டுதோறும் 12 தலைப்புகளில் சிறந்த நூல்களுக்கும் படைப் பாளிகளுக்கும் மொத்தம் ரூ.22 லட்சம் மதிப்புள்ள விருதுகளை வழங்கி வருகிறது.
புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது, அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது, பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது, ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது அல்லது முத்துத்தாண்டவர் தமிழிசை விருது, புலம் பெயர்ந்த படைப்பாளிகளுக்கான விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது, அப்துல் கலாம் இளம் தமிழ் ஆய்வறிஞர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு விருதுக்கும் தலா ரூ.1 லட்சத்துக்கு 50 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருதுக்கு ரூ.1 லட்சமும், தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதுக்கு ரூ.2 லட்சமும் தரப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட விருதுகளுடன் சிறந்த தமிழறிஞருக்கான பரிதிமாற் கலைஞர் விருது ரூ.2 லட்சமும், தமிழ்ப் பேரறிஞர், வாழ்நாள் சாதனையாளருக்கான பாரிவேந்தர் பைந்தமிழ் விருது ரூ.5 லட்சமும் வழங்கப்படும். 2017-ம் ஆண்டுக்கான எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தமிழ்ப்பேராய விருதுக்காக விண்ணப்பிப்பவர்கள் 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் முதல் பதிப்பாக வெளிவந்த நூல்களின் 5 படிகளை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களும் நூல்களும் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 15-ம் தேதி. அனுப்ப வேண்டிய முகவரி: செயலர், தமிழ்ப்பேராயம், 17, நான்காம் தளம், பல்கலைக்கழகக் கட்டிடம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், பொத்தேரி, காஞ்சிபுரம் மாவட்டம் 603 203. தொலைபேசி எண் 044 - 27417375/76. கூடுதல் விவரங்களை www.srmuniv.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று தமிழ்ப்பேராயம் தெரிவித்துள்ளது.