நாட்டில் தற்போது 27 கோடி மக்கள் கல்வி பெறாமல் உள்ளனர். எனவே, அடுத்த 5 ஆண்டு களுக்குள் 100% கல்வியறிவை எட்ட வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 5-வது ரோட்டரி சங்க தெற்காசிய கல்வி உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:
ஆசிரியர் பணியில் சேரும் அனைவரும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பற்றி கற்க வேண்டும். அவர் தன் வாழ்நாள் முழுவதும் கல்வி பற்றியும், குழந்தைகள் பற்றியும் சிந்தித்துக்கொண்டே இருந்தார். சமூகத்தில் உள்ள அனைவரையும் எப்போதும் ஊக்கப்படுத்தினார்.
சமூகத்தில் கல்வியறிவை ஏற்படுத்த ரோட்டரி சங்கம் மகத்தான பணி ஆற்றிவருகிறது. உலகம் முழுவதும் 110 ஆண்டுகளாக நிலவிவந்த போலியோவை ஒழித்து ரோட்டரி சங்கம் சாதனை படைத்ததுபோல, நாட்டில் உள்ள கல்லாமையைப் போக்கி அனைவருக்கும் எழுத்தறிவை ஏற்படுத்தியும் ரோட்டரி சங்கம் சாதனை படைக்க வேண்டும்.
சுதந்திரம் அடைந்தபோது, நாட்டில் கல்வி யறிவு 17% ஆக இருந்தது. அது தற்போது 75%க்கு மேல் உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது 27 கோடி மக்கள் கல்வி பெறாமல் உள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 100 சதவீத கல்வியறிவை எட்ட வேண்டும். இதற்கு சமூகத்தின் ஒத்துழைப்பு தேவை.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
ரோட்டரி இந்தியா கல்வியறிவு இயக்கத் தலைவர் சேகர் மேத்தா பேசும்போது, ‘‘நாட்டில் கல்வியறிவு மேம்படும் வகையில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் கையெழுத்தாகின்றன’’ என்றார்.
சர்வதேச ரோட்டரி சங்க தலைவர் ஜான் ஜெர்ம், சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் ஆலன் ஜெம்மல், இந்தியாவுக்கான யுனெஸ்கோ பிரதிநிதி ஷிகேரு ஓயாகி மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர். 3 நாட்கள் நடைபெறும் மாநாடு, 5-ம் தேதி நிறைவடைகிறது.