தமிழகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம்: கன மழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய, விடிய இடியுடன் கனமழை பெய்தது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் மழை நீடிக்கும்:

இலங்கையை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த கிராம மக்கள், ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இலங்கையை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள வளிமண்டலத்தில் கடந்த புதன்கிழமை இரவு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தம், நேற்று அதே இடத்தில் நிலைகொண்டிருந்தது.

இதன் காரணமாக தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்யும். வடதமிழகத்திலும் கன மழை பெய்யும். சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யக்கூடும். இதுதவிர ஏற்கெனவே அரபிக்கடல் பகுதியில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.

வடகிழக்கு பருவ மழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். இந்த காலத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கிய ஒரு வாரத்திலேயே மாநிலம் முழுவதும் சராசரியாக 18 செ.மீ. மழை பெய்துள்ளது. எனவே, இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவை எட்டும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையாக 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 11 செ.மீ., சேரன்மாதேவியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், சிவகங்கை மாவட்டம் திருபுவனம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆகிய பகுதியில் 6 செ.மீ., தஞ்சை மாவட்டம் வல்லம், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உள்ளிட்ட இடங்களில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று அமைந்தகரை, மாதவரம், மதுரவாயில், வடபழனி, சைதாப் பேட்டை, கிண்டி, அண்ணா சாலை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்தது.

SCROLL FOR NEXT