மக்களைப் பாதிக்கும் மின்கட்டண உயர்வு மற்றும் பால்விலை உயர்வை கண்டித்து நவம்பர் 5 ஆம் தேதி சென்னையில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் பால் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், மின் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டு, அதை நியாயப்படுத்துவதற்காக பொதுமக்கள் கருத்துக் கேட்பு என்ற பெயரில் நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை.
தமிழக மக்களுக்கு மின்சாரம் வழங்கும் மின்சார வாரியமும், பால் வழங்கும் ஆவின் நிறுவனமும் நட்டத்தில் இயங்குவதற்கு அந்த நிறுவனங்களில் நிலவும் ஊழல்களும், நிர்வாகத் திறமையின்மையும் தான். அவற்றை சரி செய்வதை விடுத்து மின் கட்டணத்தையும், பால் விலையையும் உயர்த்தி மக்கள் தலையில் பெருஞ்சுமையை சுமத்துவது கண்டிக்கத்தக்கது.
ஊழல் செய்து பொதுத்துறை நிறுவனங்களை நலிவடையச் செய்துவிட்டு, அதை சமாளிக்க விலை உயர்வையும், கட்டண உயர்வையும் அறிவிப்பதில் இருந்தே மக்கள் நலனில் ஆட்சியாளர்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளனர் என்பதை அறியலாம்.
கடந்த 24-ம் தேதி சென்னையில் நடைபெற்ற மின்கட்டண உயர்வு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர், இந்தக் குற்றச்சாற்றை உறுதி செய்ததுடன், தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கக்கூடாது என்ற ஆணையத்தின் பரிந்துரையை மின்சார வாரியம் மதிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மின்வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்புக்கு அதன் நிர்வாகத் திறமையின்மை தான் காரணம் என ஒழுங்குமுறை ஆணையமே ஒப்புக்கொண்ட பிறகும், ரூ.6805 கோடி அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்க வேண்டும் என்ற மின்சார வாரியத்தின் கோரிக்கையை ரத்து செய்வதை விடுத்து, மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்னும் ஏன் நடத்திக் கொண்டிருக்கிறது என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதேபோல், ஆவின் நிறுவனத்தில் அமைச்சர்களின் உதவியுடன் அ.தி.மு.க.வினர் நடத்திய பால் கலப்பட ஊழல் தான் கோடிக்கணக்கில் ஏற்பட்ட நட்டத்திற்கு காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை ஆகும். இந்த நட்டத்தை மக்கள் தலையில் சுமத்தும் நோக்குடன் ஒரே முறையில் வரலாறு காணாத வகையில் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்துவதை ஏற்க முடியாது. இந்த விலை உயர்வால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே, மக்களைப் பாதிக்கும் மின்கட்டண உயர்வு மற்றும் பால்விலை உயர்வை கண்டித்தும், அவற்றை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.
இப்போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்பார் என்பதையும், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் கூறியிருந்தார்.