விதிகளின்படி சட்டப்பேரவையில் பொது வாக்கெடுப்பு மட்டுமே நடத்த முடியும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது என தமிழக சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீன் சென்னை உயர் திமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்றதும், சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரியும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரியும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி எம்.சுந்தர் தலைமையிலான முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சட்டப்பேரவைச் செயலர் பதில் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "விதிகளின்படி சட்டப்பேரவையில் பொது வாக்கெடுப்பு மட்டுமே நடத்த முடியும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது. வாக்கெடுப்பை நடத்தவிடாமல் திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் மட்டுமே அவர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வாக்கெடுப்பில் எந்த விதிமீறலும் இல்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து வரும் 17-ம் தேதிக்குள் இந்த பதில் மனுவுக்கு உரிய பதில் அளிக்குமாறு வழக்கைத் தொடர்ந்த திமுக தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட திமுக தரப்பு வழக்கறிஞர் சண்முக சுந்தரம், "சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு அடங்கிய வீடியோ பதிவை வழங்க வேண்டும் என்று கோரினார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு வீடியோவை ஸ்டாலின் தரப்புக்கு அளிக்குமாறு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மார்ச் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.