தமிழகம்

சிறிய பஸ்களில் இரட்டை இலை? - சட்டமன்றத்தில் வாக்குவாதம்

செய்திப்பிரிவு

சிறிய பஸ்களில் இலை சின்னம் இருப்பது தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று தி.மு.க. அ.தி.மு.க. உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். சபாநாயகரை திமுகவினர் முற்றுகையிட்டதால் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.

இன்று, காலை சட்டமன்ற கேள்வி நேரத்தின் போது சிறிய பஸ்களில் இரட்டை இலை சின்னம் இருப்பது குறித்து விவாதம் எழுந்தது. அப்போது திமுக உறுப்பினர் எ.வ. வேலு குறித்து, அமைச்சர் முனுசாமி கருத்துக் கூறினார்.

முனுசாமி கூறிய கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி சபாநாயகரை திமுகவினர் முற்றுகையிட்டனர். ஆனால், முனுசாமி கூறிய கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார்.

இதனைக் கண்டித்து, தி.மு.க. உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சிவசங்கரன், சவுந்திர பாண்டியன், திராவிட மணி, ஆகியோர் சபாநாயகர் முன் அமர்ந்து கோஷமிட்டனர்.

தொடர்ந்து கோஷம் எழுப்பியதை அடுத்து திமுகவினரை வெளியேற்ற அவை பாதுகாவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

'இயற்கைக் காட்சியே'

பின்னர் பேசிய போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறிய பஸ்களில் இரட்டை இலை சின்னம் இருப்பதாக கூறுவதை மறுக்கிறேன். அவை இயற்கைக் காட்சியை பிரதிபலிப்பவை மட்டுமே. அதிமுக ஆட்சி மீது எந்த ஒரு குறையும் காண முடியாமலேயே திமுக-வினர் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர், என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை (அக்.25-ல்) தமிழக அரசு தொடங்கி வைத்த சிறிய பஸ்களின் படத்தை கொண்டுவந்த தி.மு.க. உறுப்பினர்கள், புதிய பஸ்களில் இரட்டை இலை சின்னம் இருந்ததை சுட்டிக்காட்டி முழக்கமிட்டதால் சட்டமன்றத்திலிருந்து தி.மு.க.-வினர் வெளியேற்றப்பட்டனர்.

கருணாநிதி கேள்வி:

சிறிய பஸ்களில் இரட்டை இலை சின்னம் இருப்பது குறித்து தி.மு.க. தலைவர் கருணானிதி கூறுகையில்: முதல்வர் தொடங்கி வைத்துள்ள அரசு பஸ்களில் எல்லாம் இரட்டை இலை சின்னம் போடப்பட்டுள்ளது. அதைப்போலவே அம்மா குடிநீர் பாட்டில் திட்டம் கொண்டு வந்தபோதும் அதில் இரட்டை இலை சின்னத்தைப் பொறித்திருக்கிறது.

எனவே இந்தத் திட்டங்கள் எல்லாம் மக்கள் நிதியிலிருந்து அரசின் சார்பில் நிறைவேற்றப்படுகின்றனவா அல்லது அ.தி.மு.க. எனும் அரசியல் கட்சியின் சார்பில் தனிப்பட்ட முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா? என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT