திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் முற்கால ‘தமிழி’ கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் சோ.கண்ணதாசன், பொந்தியாகுளம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கோ.தில்லைகோவிந்தராஜன் ஆகியோர் கூறியது:
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆனந்தனேஸ்வரர் தியான மண்டபம் அருகில் உள்ள மதில் சுவரில் பழமை யான, 2 வரியில் உள்ள தமிழிக் கல்வெட்டை படியெடுத்து ஆய்வு மேற்கொண்டோம்.
18 வகையான எழுத்து வடிவப் பெயர்களைக் குறிப்பிடும், முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘சமய வயங்க சுத்த’ எனும் சமண நூலில் ‘தமிழி’ என்ற பெயர் காணப்படுகிறது. இதன் காரணமாகத் தென்னகத்தில் இருந்த முற்கால எழுத்து வடிவத்தைத் தமிழி என்றனர். இந்த தமிழிக் கல்வெட்டுக்கள் அசோகரின் வடபிராமியிலிருந்து மாறுபட்டு, தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துக்களான எ, ஒ, ழ, ற, ன-வைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி. 4-ம் நூற்றாண்டு முதல் தமிழி என்ற எழுத்து வடிவம், தமிழ் எழுத்து மற்றும் வட்டெழுத்து தமிழ் என இரு வகையாக வளர்ந்தன. ஈரோடு மாவட்டம் அரச்சலூர், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி, மதுரை மாவட்டம் மாங்குளம் போன்ற ஊர்களில் இடம் பெற்றுள்ள கல்வெட்டுகளில் இதன் வளர்ச்சி நிலையைக் காணலாம்.
சோழநாட்டில் பல்லவர் காலம் முதல் தமிழ் வடிவ எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகளே கண்டறியப்பட்டு வந்த நிலையில், மேற்குறிப்பிட்ட தமிழி எழுத்தின் இருவகை வளர்ச்சி நிலையையும் ஒருங்கே கொண்ட, கி.பி. 4 அல்லது 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சோழநாட்டில் திருவிடைவாயில் கோயிலுக்கு பாண்டிய மன்னன் வழங்கிய சங்கின் மேல் குறிக்கப்பட்டதைத் தவிர, வேறெங்கும் வட்டெழுத்து தமிழ்க் கல்வெட்டுக் காணப்பட வில்லை. இந்நிலையில், சோழ நாட்டில் முதல்முறையாக, திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தமிழி எழுத்தின் 2 வகையான எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கல்வெட்டில் முதல்வரிசை இரண்டாம் எழுத்தில் றகர தமிழி எழுத்தும், ஆறாம் எழுத்தில் எகர வட்டெழுத்தும், கடைசி எழுத்தில் சிறப்பு ழகர தமிழி எழுத்தும் இடம்பெற்றிருப்பது சிறப்புக் குரியது. இக்கல்வெட்டை தொல் எழுத்தாய்வாளர்கள் மேலும் ஆய்வு செய்து, தமிழுக்கும், தமிழர் வரலாற்றுக்கும் வலுசேர்க்க வேண்டும் என்றனர்.