வறுமையில் வாடும் பழம்பெரும் இசையமைப்பாளர் கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவருக்கு காதொலிக் கருவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளைய ராஜா, தேவா ஆகியோரிடம் உதவி இசையமைப்பாளராக இருந்தவர் கோவர்தன் (88). அவர் தற்போது மனைவியுடன் சேலத்தில் வசித்து வருகிறார். எந்தவிதமான வருமானமும் இல்லாமல் வறுமைச் சூழலில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்க்கை நடத்த நிதியுதவி வழங்குமாறும் முதல்வர் ஜெயலலிதாவிடம் அவர் வேண்டுகோள் வைத்தார்.
அவரது வேண்டுகோளை பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் அறக்கட்டளையில் இருந்து கோவர்தனுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிதி ரூ.10 லட்சமும் கோவர்தன் பெயரில் தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் வைப்பு நிதியாக வைக்கப்படும். அந்த நிதியில் இருந்து மாதந்தோறும் அவருக்கு ரூ.8,125 தொகை கிடைக்கும்.
மருத்துவ சிகிச்சை
மேலும், கோவர்தனின் செவித் திறன் குறைபாட்டை நீக்கும் வகையில் மருத்துவ சிகிச்சை அளித்து காதொலிக் கருவி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.