சென்னை பெரம்பூர் ராகவன் தெருவில் பிஎஸ்என்எல் இணைப்புகள் கடந்த 3 மாதங்களாக இயங்கவில்லை என்று ‘தி இந்து’ உங்கள் குரலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரலில் ஆர்.சின்னதுரை என்பவர் அளித்த புகார் பின்வருமாறு:
பெரம்பூர், ராகவன் நகர், காந்தி சிலைக்கு பின்புறத்தில் பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டிகள் உள்ளன. அவற்றிலிருந்து ஏராளமான வீடுகளுக்கு பிஎஸ்என்எல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 25.02.2016 முதல் சுமார் 3 மாதத்துக்கு மேல் அந்த இணைப்புப் பெட்டிகளிலிருந்து செல்லும் இணைப்புகள் எதுவும் இயங்கவில்லை. இது தொடர்பாக பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். கேபிள் இல்லாத காரணத்தால் தற்போது சரி செய்ய முடியாது என்று கூறுகின்றனர். பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சேவை இப்படி இருப்பது கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அந்தப் பகுதியில் கேபிள் கோளாறு காரணத்தால் பிரச்சினை நிலவுகிறது. சம்பந்தப்பட்ட இணைப்பகத்தை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்போம்’ என்றனர்.