புதிய ஹைபிரிடு ரகமான ‘சிம்ரன்’ கத்தரிக்காய் வறட்சியைத் தாங்கி, நோய்கள் எதுவும் தாக்குதல் இல்லாமல் விளைவதால் விவசாயிகள் மத்தியில் சிம்ரன் கத்தரிக்காய்க்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சக்கரபாணி. இவரது தோட்டத்தில் இஸ்ரேல் தொழில்நுட்பமான பசுமைகுடில் அமைத்து அதன் உள்ளும், வெளியிலிலும் நிலப்போர்வை முறையில் சொட்டுநீர் பாசனம் அமைத்து ‘சிம்ரன்’ என்ற ஹைபிரிடு கத்தரிக்காய் பயிரிடப்பட்டுள்ளது.
குறைந்த அளவு தண்ணீரில் சொட்டு நீர் மூலம் நீர்ப்பாசனம் செய்வதால் கத்தரிக்காய் செடிகள் வறட்சியைத் தாங்கி வளர்கின்றன. பசுமைகுடில் அமைத்துள்ளதால் நோய் தாக்குதல் பாதிப்பில் இருந்தும் கத்தரி செடிகள் தப்பிக்கின்றன. மேலும், சிம்ரன் ரக கத்தரிச் செடியில் கொத்துக்கொத்தாக காய்கள் காய்க்கின்றன. வைலட் நிறம் கலந்து கத்திரிக்காய் காணப்படுகிறது. பாதிப்பின்றி அதிக விளைச்சல் தரும் ரகமாக சிம்ரன் கத்தரிக்காய் உள்ளது.
இதுகுறித்து விவசாயி சக்கரபாணி கூறியதாவது:
காந்திகிராமம் வேளாண் அறிவியல் மையம் சார்பில் பசுமை குடில் அமைக்க மத்திய அரசின் மானியம் கிடைத்தது. புதிய ஹைபிரிட் ரகமான சிம்ரன் கத்தரிக்காயை பசுமைகுடில் மற்றும் நிலப்போர்வை அமைத்தும் பயிரிட்டுள்ளேன். தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவதால் பாதிப்பில்லை, நோய் தாக்குதலும் இல்லை. 50 முதல் 60 நாட்களுக்குள் மேல் செடியில் காய்கள் காய்த்துவிடும். தற்போது கிலோ ரூ.40-க்கு வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர் என்றார்.
இதுகுறித்து காந்திகிராமம் வேளாண்மை அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ.உதயகுமார் கூறியதாவது:
விவசாயப் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக ஹைபிரிட் ரக விதைகளை விதைக்க விவசாயிகளை ஊக்குவித்து வருகிறோம். ஒட்டுரகமான ‘சிம்ரன்’ கத்தரிக்காய் செடி வறட்சியை தாங்கி வளர்கிறது. ஒரு ஏக்கரில் எட்டாயிரம் செடிகள் நடவுசெய்யலாம். பயிரிட்ட 60 நாள் முதல் ஓராண்டு வரை கத்தரிக்காயை அறுவடை செய்யலாம்.
இதனால் ஏக்கருக்கு 20 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. அருகில் ஒட்டன்சத்திரம் காய்கறி மொத்த சந்தை உள்ளது. எவ்வளவு விளைந்தாலும் கொள்முதல் செய்ய வியாபாரிகள் இருப்பதால் நல்ல விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் சிம்ரன் ரக கத்தரிக்காயை பயிரிடத் தொடங்கியுள்ளனர் என்றார்.
விவசாயி சக்கரபாணி.